சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள ஜல்லூத்துமலை, ஜருகுமலை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் சூரியூர் பள்ளக்காடு என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம மக்கள், வனத்துறையினரால் காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்து குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ளுமாறு வனத்துறை சொல்லி வந்தபோதெல்லாம், காலங்காலமாக வசித்து வரும் எங்கள் பூர்வீக நிலத்தை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டோம் என்று மலைவாழ் மக்களும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இது தொடர்பாக சூரியூர் மக்களும், வனத்துறையினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், வனத்துறைக்குச் சொந்தமான நிலப்பகுதிக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.
இது ஒருபுறம் இருக்க, வனஉரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு வனப்பகுதியில் குடியிருக்க பட்டா வழங்க வேண்டும் என்று சூரியூர் பள்ளக்காட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தலைமையில் 50- க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், சூரியூர் பள்ளக்காடு பகுதி முழுவதும் வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடு பகுதியாகும். அதனால் அங்கே யாருக்கும் பட்டா வழங்க முடியாது என்று ஆட்சியரகம் சொல்லி விட்டது. அதனால், ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக குடிசைகளை காலி செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
அதைத் தொடர்ந்து வனத்துறையினர், சூரியூர் பள்ளக்காட்டைச் சேர்ந்த 14 பேருக்கு ஜன. 27ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அளித்தது. அதையும் மீறி யாரும் குடிசைகளை காலி செய்யாததால், திங்கள்கிழமை (ஜன. 27) வனத்துறை, வருவய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சூரியூருக்கு படையெடுத்தனர்.
தயாராக கொண்டு செல்லப்பட்ட பொக்லின், புல்டோசர் வாகனங்கள் மூலம் ஏழு குடிசைகள், 7 தகர கொட்டகைகளை அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினர். சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் ஊரக டிஎஸ்பி உமாசங்கர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு குவி க்கப்பட்டனர்.
இதுகுறித்து சூரியூர் பள்ளக்காட்டைச் சேர்ந்த முருகேசன் கூறுகையில், ''காலங்காலமாக நாங்கள் இந்த மலைக்கிராமத்தில்தான் வசித்து வருகிறோம். எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வன உரிமைச்சட்டத்தின்படி, சூரியூர் பள்ளக்காடு கிராம மக்களுக்கு பட்டா வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் அளித்த கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகம் ஏற்கவும் இல்லை. அதேநேரம் நிராகரிக்கவும் இல்லை. இந்த நிலையில், எங்கள் குடிசைகளை இடித்து அகற்றுகின்றனர். எங்களின் கோரிக்கையை அதிகாரிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்,'' என்றார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமியிடம் கேட்டபோது, ''வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு, ஒருமுறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன்பின் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமித்து குடிசைகளை போட்டுள்ளனர். தற்போது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சூரியூர் பள்ளக்காட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறோம். இந்த காப்புக்காட்டில் மரக்கன்றுகள் நடப்படும்,'' என்றார்.