Skip to main content

’மரியாதை இல்லாமல் பேசுவது வைகோவுக்கு மரியாதை இல்லை;அவருக்கு நாவடக்கம் தேவை’- எச்.ராஜா பேட்டி

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
r

 

ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவரின் அறுபதாம் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நாமக்கல்லுக்கு திங்கள்கிழமை (டிசம்பர் 3, 2018) வந்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


தமிழகத்தில் கஜா புயலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைவது ஏற்புடைய விஷயம் அல்ல. இதற்கு முன்பு, எந்த ஒரு இயற்கை பேரிடராக இருந்தாலும், மத்திய ஆய்வுக்குழுவினர் விரைவாக வந்ததில்லை. இந்த முறை, புயல் வந்த மூன்றாவது நாளே மத்தியக்குழு வந்தது. ஒரு வாரம் இங்கே இருந்து, பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்துள்ளனர். 


அதுமட்டுமின்றி, வீடுகளை இழந்து தவிக்கும் அனைவருக்கும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உடனடியாக பணிகளை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்ட ஓரிரு நாளில் மத்திய அரசு, அரசாணை வெளியிட உள்ளது. 


கஜா புயலால் மூன்று லட்சம் வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றாலும்கூட, அவர்களுக்கு வீடு கட்ட 6300 கோடி ரூபாய் செலவாகும். இந்த தொகை, நிவாரணத்தில் சேராதா? இப்போது ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை என்பது அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. 


விழுந்து கிடக்கும் தென்னை உள்ளிட்ட மரங்களை விவசாயிகளுக்கு எந்த ஒரு செலவும் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. வெளி மாநிலத்தில் இருந்தும்கூட தென்னங்கன்றுகளை தருவித்துத் தருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகிய இரு நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. 


இவ்வளவு பெரிய பேரிடரில் இருந்து ஒரே நாளில் மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும்? ஒரு லட்சத்து இருபதாயிரம் மின்கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன. கொட்டும் மழையிலும், தண்ணீரிலும் மின் ஊழியர்கள் மின் கம்பங்களை போட்டுக்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


67 ஆண்டுகள் காசு சம்பாதிப்பதிலும், போகங்கள் அனுபவிப்பதிலும் செலவு செய்த கமலஹாசன், ஏதோ சினிமா சூட்டிங் போல கீழே விழுந்து கிடக்கும் மரத்தின் மீது காலை வைத்துக்கொண்டு, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று பேசினால் என்ன அர்த்தம்? யார் வஞ்சிக்கிறார்கள்? வாழ்நாள் முழுவதும் மக்களை வஞ்சித்து மோகத்தைக் காட்டி சுரண்டி வாழ்க்கை நடத்திய ஒரு நடிகர் மத்திய அரசை விமர்சிக்கலாமா? இந்த மாதிரியாக எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று இருக்கக்கூடாது.


ஜாக்டோஜியோ அமைப்பினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். ஆறேழு மாவட்டங்கள் பெரிய அளவில் பாதித்து இருக்கும்போது மக்களுக்கு சேவை செய்யவில்லை என்றாலும், வேலைநிறுத்தம் என்று அரசாங்கத்தை மிரட்டுவது மனிதாபிமானம் உள்ள செயலா? என்று யோசிக்க வேண்டும். 


கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும்கூட ஸ்டிரைக் செய்வதற்கு இது நேரமில்லை. இப்போது நீங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய தருணம் இது. மின் இலாகாவைச் சேர்ந்தவர்கள் இராப்பகலாக வேலை செய்து வருகின்றனர். மேற்கு வங்கம், ஆந்திராவில் இருந்தும்கூட மின்துறை ஊழியர்கள் இங்கே வந்துள்ளனர். 


இங்குள்ள அரசு ஊழியர்களை திமுகவும், அக்கட்சியோடு இருக்கும் சில சில்லரை கட்சிகளும் தூண்டிவிட்டதற்கு இவர்கள் ஆளாகிப் போய், ஸ்டிரைக்கை அறிவித்திருப்பது சரியல்ல. ஆகவே ஸ்டிரைக்கை உடனடியாக வாபஸ் வேண்டும்.


என்ன கோரிக்கையாக இருந்தாலும்கூட நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு பேசிக்கலாம். அரசாங்கம் எங்கேயும் ஓடிப்போகப்போறதில்லை. ஆனால் ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோயிலைப் பற்றி எதற்காக தீர்மானம் போடுகிறீர்கள்? உங்கள் கோரிக்கைகளுக்கும், சபரிமலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?


இந்த தீர்மானத்தின் மூலம் ஜாக்டோ ஜியோவில் இவான்ஜலிஸ்டுகளும், நக்சலைட்டுகளும்தான் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அய்யப்பன் கோயிலைப் பற்றி எப்படி தீர்மானம் போடலாம்? கேரளாவில் பிரவன் சர்ச் குறித்த தீர்ப்பு வந்துள்ளது. அதைப்பற்றி ஏன் தீர்மானம் போடவில்லை? கிறிஸ்தவ மதமாற்றும் சக்திகள், நகர்ப்புற நக்சலைட்டுகள் கைகளில் ஜாக்டோஜியோ போய்விட்டது. 


அய்யப்பன் கோயிலுக்கு மாலை போடும் அத்தனை அரசு ஊழியர்களும் இந்து விரோத சக்திகளை விட்டு வெளியே வர வேண்டும். தன்மானமுள்ள இந்துக்கள் ஜாக்டோஜியோவில் உறுப்பினர்களாக இருக்க முடியாது. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஹெச்.ராஜா கூறியது:


கேள்வி: திமுகவுடன் இருக்கும் எல்லா கட்சிகளுமே சில்லரை கட்சிகள்தானா? 


ஹெச். ராஜா: ஆமாம். எல்லா கட்சிகளுமே சில்லரைக் கட்சிகள்தான். திமுக உடன் இருக்கும் கட்சிகளில் எந்த கட்சியாவது மாவட்ட அளவிலாவது இருக்கிறதா? விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடலூரில்கூட இல்லையே. அப்படிப்பட்ட கட்சி சனாதன தர்மத்தை எதிர்த்து மாநாடு நடத்துமாம். அதில் ஸ்டாலின் கலந்துக்குவாராம். அவர்கள் ஒட்டுமொத்தமாகவே இந்து விரோதிகள்தான்.


கேள்வி: வைகோ தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறாரே?


ராஜா: வைகோ, வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். மரியாதை இல்லாமல் பேசுவது அவருக்கு மரியாதை இல்லை. அவருக்கு நாவடக்கம் தேவை.  


கேள்வி: கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே?


ராஜா: தானே புயல் பாதிப்புகளை அவருடைய அப்பா போய் பார்த்தாரா? அன்று பேசினீர்களா? அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வந்து பார்த்தாரா? திருப்பிக் கேட்க ஆரம்பித்தால், அவருக்கு தர்ம சங்கடம் ஜாஸ்தியாகி விடும். ஸ்டாலின் கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், அதிகமாக மோடிஜியை சீண்டக்கூடாது. 1977 சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், தமிழகத்தை திமுக விஞ்ஞான பூர்வமாக கொள்ளையடித்தது; கோதுமை பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், பூச்சி மருந்து ஊழல், அண்ணா மேம்பால ஊ-ழல் என்று எல்லாவற்றையும் பேசுவேன். 


உயிரில்லாத பட்டேலுக்கு சிலை வைத்ததாக கனிமொழி பேசியிருக்கிறார். தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு எல்லாம் உயிர் இருக்கிறதா? என்ன பேச்சு இதெல்லாம்? நூற்றுக்கணக்காக பெரியார் சிலை வைத்து வெட்டிச்செலவு ஏன் செய்தீர்கள்? 


கேள்வி: காங்கிரஸ் போல பாஜகவும் மாநிலக்கட்சியாக சுருங்கி விடும் என்று தம்பிதுரை பேசியிருக்கிறாரே?


ராஜா: தம்பிதுரை பாவம். அவர், துணை சபாநாயகர் பதவி பறிபோய்விடும் என்று பயப்படுகிறார். அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்பட வேண்டியதில்லை. அப்படி ஒன்றும் ஆகிவிடாது.


கேள்வி: ராஜஸ்தான் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது?


பாஜக மூன்று மாநிலங்களில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். மற்ற இரண்டு மாநிலங்களில் பாஜக ஆதரவு இல்லாமல் ஆட்சி அமையாது. தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும். கூரை ஏறி கோழியைப் பிடிக்க முடியாத சந்திரபாபு நாயுடுதான் ஸ்டாலினை துணை பிரதமர் ஆக்கப் போகிறாரா?. இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.

 

 

சார்ந்த செய்திகள்