விவசாய கிணறுகளில் உள்ள பம்பு செட்டுக்களை செல்போன் மூலம் இயக்கும் கருவியை மானியத்தில் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழை காலங்களில் கிணறுகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்கிறார்கள். அப்போது பாம்பு மற்றும் விஷப்பூச்சிகடி உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்க நேரிடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி தற்போது மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன்மூலம் விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து செல்போன் மூலம் இயக்கவும் நிறுத்தவும் முடியும். இதனை வாங்குவதற்கு சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
இதர விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். பழைய மின் மோட்டாரை மாற்றம் செய்து புதிய மின் மோட்டார் வாங்குவதற்கு ஏற்கனவே வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நுண்நீர் பாசனத்திற்கு விண்ணப்பித்திருந்த சிறு, குறு, விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
மேலும், தரிசு நிலங்களில் சிறு தானிய சாகுபடிக்கு சட்டி கலப்பை, சுழல் கலப்பை, ஐந்து அல்லது ஒன்பது கொத்து கலப்பைகளை பயன்படுத்தி செய்யப்படும் உழவு பணிக்கு அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரத்து 400 மானியம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பான கூடுதல் விபரங்கள் பெற ஈரோடு வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்தினை 0424-2270067 என்ற தொலைபேசி எண்ணிலும், உதவிசெயற்பொறியாளரை 0424-2904843 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.