Skip to main content

சேலத்தில் காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் போராட்டம்! வாலிபரை கடத்தி விட்டதாக புகார்!!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

 


சேலத்தில், சாதியைக் காரணம் காட்டி காதலனை அவருடைய பெற்றோரும், உறவினரும் கடத்திச்சென்று விட்டதாகக்கூறி, காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். 


சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா (21). சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கல்லூரிக்கு தினமும் செல்லும் போதும், வரும்போதும் தன் வீடு அருகே வசிக்கும் தறித்தொழிலாளி பூபதி (27) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மலர்ந்தது. 

 

s

 

கடந்த ஒன்றரை ஆண்டாக இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பல இடங்களில் காதலர்கள் ஜோடியாக சுற்றித்திரிந்துள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, கவுசல்யா தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு பூபதியிடம் கூறியுள்ளார். அதற்கு பூபதி, நாம் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நம் திருமணத்திற்கு என் பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். நம் காதல் விவகாரம் அவர்களுக்கு தெரியும். அவர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகும், பலமுறை காதலனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.


பூபதி, கவுசல்யாவை சந்திப்பதையும் பேசுவதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி, கவுசல்யா தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, உயிர் பிழைக்க வைத்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பி கவுசல்யா, காதலனுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இந்நிலையில் பூபதி திடீரென்று மாயமானார். அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. பூபதியை அவருடைய தாயார் சாரதா, அக்காள் கணவர் தனசேகரன் ஆகியோர் கடத்திச்சென்று விட்டதாகவும், அவர் உயிருடன் இருக்கிறாரா? கொலை செய்துவிட்டனரா? எனத் தெரியவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கவுசல்யா இன்று (ஆக. 31) மீண்டும் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், காதலன் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்திலும் ஈடுபட்டார். 


ஊர் மக்கள், உறவினர்கள் கவுசல்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் அவரிடம் சமாதானப் பேச்சு நடத்தினர். பின்னர் மாலையில் போராட்டத்தைக் கைவிட்டு வீட்டுக்குக் கிளம்பிச்சென்றார். இந்த சம்பவத்தால் எஸ்.நாட்டாமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்