கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம். சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்கள், காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சியில் நோய் கட்டுக்குள் வந்தாலும் மாநகராட்சிக்குள் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் உணவு இல்லை என்ற நிலை ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பாராட்டுகள். தினமும் சராசரியாக 7 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் உணவருந்தி வருகின்றனர். காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்யத் தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். ரேஷன், காய்கறி கடைகளில் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றாமல் பொருள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். தனிநபர் இடைவெளியை ஏற்படுத்த தன்னார்வலர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். டோக்கன் கொடுப்பதுடன் ரேஷன் பொருள் தரும் நாள், நேரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
விவசாயப் பணிகளுக்குப் பொதுமுடக்கத்தில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்தத் தடையும் செய்யக்கூடாது. முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் 100 நாள் வேலை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதிக ஆட்கள் இருந்தால் 2 ஆக அல்லது 3 ஆக பிரித்து பணி வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர்க்க வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்குப் பணி தரலாம்.
கரோனா குறைந்த பச்சைப்பகுதியில் தொழில் தொடங்க அரசு தரும் அறிவுரைகளை ஏற்று ஆட்சியர்கள் செயல்படலாம். சிவப்பில் இருந்து ஆரஞ்சு, ஆரஞ்சில் இருந்து பச்சைப் பகுதிக்கு வந்தால்தான் தொழில்கள் இயங்க முடியும்". இவ்வாறு முதல்வர் பேசினார்.