கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள கதிர்வேல் நகரிலிருந்து மீதிகுடிவரை சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் கர்ப்பிணி பெண்களை கரு சிதைவு வரை தள்ளியும் உள்ளது. இந்த சாலை வேதனையான ஒன்றாக உள்ளது. பணியின் ஒப்பந்த காலம் முடிந்தும் சம்பந்தபட்ட அதிகாரிகள் கண்டும் காணமல் உள்ளதால் இதுபோன்ற கொடுமைகள் நடக்கிறது என்று பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.
பரங்கிப்பேட்டை ஒன்றியம்,கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகர் முதல் மீதிகுடி கிராமம் வரை 1600 மீ சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்று மிகவும் மோசமான நிலையில். இருந்தது. இந்த சாலையின் வழியாக மீதிகுடியைச் சுற்றியுள்ள கிராமங்களான கோவிலாம்பூண்டி, மீதிகுடிமேற்கு ,கிழக்கு கிராம மக்கள் அண்ணாமலை நகர்,சிதம்பரம் நகரை வந்தடையமுடியும். மேலும், கிள்ளை, அனுப்பம்பட்டு, ஏ.மண்டபம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அவசரத்தேவைக்காக ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பிரதான சாலையாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை நபார்டு திட்டத்தின் மூலம் ரூ 45 லட்சம் செலவில் தரமான புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு கடந்த 2017-18 ஆம் ஆண்டு அனுமதி வழங்கி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விஜயலட்சமி என்பவர் பெயரில் ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தசாலைப் பணி கடந்த 5மாதங்களுக்கு முன்தொடங்கி பழைய சாலையை பொக்கின் இயந்திரம் மூலம்கொத்தப்பட்டு, உடைத்த கருங்கல் ஜல்லி கலவைமட்டும் போட்டுச்சென்றுவிட்டனர். அதுவும் ஒப்பந்த பத்திரத்தில் உள்ளது போல் சரியான அளவில் போடவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனைதொடர்ந்து அடுத்த கட்டபணியாக தார் சாலைஅமைக்கும் பணிநடைபெறவில்லை. பெரு, சிறு கருங்கற்கல் மெதப்பலாக சாலையின் முழுவதும் கிடப்பதால் அந்தசாலையில் வாகனங்கள்செல்ல முடியாத நிலையில்உள்ளது. வாகனங்கள் செல்லும் போது அதன்பின் வாரி அடிக்கும் புழுதியால் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் புழுதி அடிப்பதால் தொடர்ந்து செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து கொத்தங்குடி ஊராட்சியில் வசிக்கும் ராஜேந்திரன், வெங்கடேசன், கிருஷ்ணன் மீதிக்குடி கிராமத்தில் வசிக்கும் கோதண்டம், பழனியப்பன், வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கூறுகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த சாலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இரு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவரது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு காலை 9 மணிக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுள்ளார். அவர் கதிர்வேல் நகர் ரயில்வே கேட்டுக்கு 100 மீ தூரத்தில் சென்றபோது சாலையில் கிடந்த கல்மீது ஏறி வண்டி நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை வந்து தூக்கிய போது அந்த பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்பட்டு புடவை ரத்தமாக மாறியதை கண்டு அனைவருக்கும் வேதனையடைந்தனவர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கர்ப்பமானால் இப்படி ஆயிடுச்சே என்று அவரது கணவன் தலையில் அடித்துக்கொண்டு அழுதது அங்கிருந்த அனைவரின் மனதையும் கலங்கவைத்தது.
பின்னர் ஆட்டோவில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதேபோல் தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் திடீர் பிரேக் அடிக்கும் போது சிறு சிறு கற்கள் வழுக்கி விட்டு நிலைதடுமாறி விழுந்து மருத்துவமனைக்கும் செல்லும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது. பணியின் ஒப்பந்த காலம் முடிந்தும் இந்த சாலை அமைக்கும் பணி கிடப்பில் போட்டுள்ளனர். சாலையை போட்டுவிட்டதாக பணத்தை எடுத்துவிட்டார்களா? என்ற கேள்வியும் எழுகிறது என்ற அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் இனிமேலாவது சாலைபோடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? என்றனர். மேலும் அவர்கள் கூறுகையில் விரைவான நடவடிக்கை இல்லை யென்றால் இந்த பகுதியில் வசிக்கும் பெருபான்மை மக்களை ஒருங்கிணைத்து சாலைமறியல் போராட்டம் நடத்தபடும் என்றனர்.