மேட்டூர் அணை நீர்மட்டம் 39வது ஆண்டாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, காவிரி ஆற்றின் குறுக்கே 1934ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி. 93.47 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
கர்நாடகா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பின. அந்த அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த 15 நாள்களாக வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் நீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் தமிழகத்தில் நீர் பிடிப்பு பகுதியான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் வழியாக தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. கடந்த ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கும் கீழே சென்று இருந்த நிலையில், நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. கடந்த 19ம் தேதி அணையின் நீர் மட்டம் 110 அடியாக இருந்தது. அதையடுத்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 117.40 அடியாக இருந்தது. இன்று பகல் 12 மணியளவில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி சாதனை படைத்தது. மேட்டூர் அணை வரலாற்றில் 39வது ஆண்டாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலையில் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 68489 கன அடியாக இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அணை, முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து நீர் திறப்பும் கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நீர்மின் நிலையம் மதகுகள் வழியாக வினாடிக்கு 2250 கன அடி நீரும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வ-ழியாக 7500 கன அடி நீரும் திறக்கப்பட்டு உள்ளது. அதாவது நீர் திறப்பு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் அளவு மேலும் உயரும் எனத்தெரிகிறது.
டெல்டா பாசன வசதி பெறக்கூடிய சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
உபரி நீர் சேமிக்கப்படுமா?
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் வீணாக வங்கக்கடலில் கலக்கிறது. இதை சேமிப்பதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, ''மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் நாகப்பட்டினம் வரை சமவெளி பகுதியில்தான் பாய்ந்து ஓடுகிறது. அதனால் தடுப்பணைகள் கட்ட முடியவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.
வெறும் 22 கி.மீ. மட்டுமே பயணிக்கும் பாலாற்றில் ஆந்திரா அரசு 22 இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி உபரி நீரை சேமித்து வருகிறது. தமிழ்நாட்டில் 222 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்தோடும் காவிரி நீரை சேமிப்பதற்கு தமிழக அரசிடம் எவ்வித செயல்திட்டமும் இல்லாததற்கு விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.