Skip to main content

ஆன்லைனில் அரியர் தேர்வு... நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 

 exam online ... Tamil Nadu government answers in court!

 

தமிழகத்தில் கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா முழுமுடக்க காலத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

 

தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த விசாரணையில் ‘தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக அரியர் தேர்வுக்குப் பணம் கட்டியிருந்தால் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உரிய முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிப்பட்டிருந்தது.

 

இன்று (15.04.2021) இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான அரசு வழக்கறிஞர், தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை கைமீறியுள்ளது. ஆன்லைனில் அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்றும், அந்த தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. அரியர் தேர்வுகளை எப்பொழுது நடத்தலாம் என்று யு.ஜி.சியிடம் கலந்தாலோசித்து 8 வாரங்களுக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான அறிக்கையை வரும் ஜூலை மாதம் 2ஆம் வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசிற்கு  தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்