/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4472.jpg)
விபத்தில் இறந்தால் கல்லூரியில் படிக்கும் தனது குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என தாய் ஒருவர் வேண்டுமென்றே பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பாப்பாத்தி, தன்னுடைய மகன் மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி அக்ரஹாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பாப்பாத்தி திடீரென சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து முன்பு பாய்ந்துள்ளார். இதில் பேருந்து மோதி பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக பேருந்து ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், “விபத்திற்கு நான் காரணம் இல்லை” என பேருந்து ஓட்டுநர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பாப்பாத்தி, திடீரென வேண்டுமென்றே பேருந்தின் முன்பக்கம் மோதுவது போல் நடந்து சென்றது தெரியவந்தது. அப்போது திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் பாப்பாத்தி கீழே விழுந்துள்ளார். அதன் பிறகு பாப்பாத்தி இரண்டாவதாக வந்த பேருந்து முன்பு ஓடிச்சென்று விழும் காட்சி பதிவாகி இருந்தது.
இதனால் அவர் திட்டமிட்டு தற்கொலை செய்வதற்காக பேருந்து முன்பு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதனை தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பாப்பாத்தியின் மகள் அவருடைய கல்லூரி படிப்பை முடித்த நிலையில், மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் பாப்பாத்தியின் மகனுக்கு கல்லூரி கட்டணம் ரூ.45 ஆயிரம் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அந்த பணத்தை பாப்பாத்தியால் கல்லூரியில் செலுத்த முடியவில்லை. இதற்காக அக்கம்பக்கத்தினரிடம் கடன் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாரும் பணம் கொடுத்து உதவ முன்வரவில்லை.
இந்த நிலையில், தூய்மை பணியாளராக பணிபுரிந்து விபத்தில் உயிரிழந்தால் மரணத்தின் மூலம் அரசு நிவாரண தொகை கிடைக்கும். அதனால், தன்னுடைய மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணை அடிப்படையில் தனது மகனுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று அவர் எண்ணி இப்படியான முடிவை அவர் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)