சாதி ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தோழி, நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23). இவர், கடந்த 2015ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி, தலை வேறு, உடல் வேறாக கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மர்ம கும்பல் உடலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளம் அருகே வீசிவிட்டுச் சென்றது. அவர், தன்னுடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இதைப் பிடிக்காத, தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரை நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட கும்பல், கோகுல்ராஜை கடத்திச்சென்று சாதி ஆணவக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின்போது ஒருவர் கொல்லப்பட்டார்; பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மற்ற 15 பேரை மட்டும் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்து விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மதுரை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி தீர்ப்பு அளித்தது. இவர்களில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான யுவராஜிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்ததோடு, அவர் இறுதிமூச்சு உள்ளவரை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை வழங்கக்கோரி அவரும் மேல்முறையீடு செய்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட காலகட்டத்தில் யுவராஜ் தரப்புக்கு எதிராக சாட்சி சொன்ன கோகுல்ராஜின் தோழி சுவாதி, வழக்கு விசாரணையின்போது பிறழ் சாட்சியமாக மாறினார். இதனால் அவர் மீது, மதுரை உயர்நீதிமன்ற கிளையே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், சுவாதியின் கணவர் ரஞ்சித், உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு முன்பு பிப். 22, 2023ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று முறையிடலாம். நேரடியாக ரிட் மனுவை உச்சநீதிமன்றத்தில் எப்படி தாக்கல் செய்யலாம்? அதனால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ரஞ்சித்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கை பொருத்தமட்டில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவில் கண்டிப்பாக தலையிட முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுவாதி எதிர்கொள்ள வேண்டும். அதில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என உத்தரவிட்டனர். இதே கோரிக்கை கொண்ட சுவாதியின் மனுவையும் கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.