கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வீர சோழபுரத்தில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் நலச் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கள்ளக்குறிச்சியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீரசோழபுரத்தில் கட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், கள்ளக்குறிச்சியில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென்றால், 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்றும் அதேபோல கள்ளக்குறிச்சி அருகே இருக்கக்கூடிய கல்வராயன் மலைப் பகுதி மலைவாழ் மக்கள் 30லிருந்து 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய நேரிடும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகிலேயே போதுமான இடம் இருந்தும் பத்து கிலோமீட்டர் தூரம் தள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வீர சோழ புரத்தில் கோவில் நிலத்தில் கட்டப்படுவதாகவும் எனவே வீரசோழபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதிக்க வேண்டும், கள்ளக்குறிச்சி அருகிலேயே ஆட்சியர் அலுவலகம் கட்ட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பேனர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஏற்கனவே கோவில் நிலத்தில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கோடு, இந்த வழக்கையும் சேர்த்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.