தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் இன்று (24.11.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் ரஜினி காந்த் காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “திருமணத்திற்கு பின் எம்.ஜி.ஆருக்கு சேவை செய்ய ஜானகி தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதிமுக பிளவுபட்ட போது வழக்கு காரணமாக இரட்டை சிலை சின்னம் முடக்கபப்ட்டது. இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது. அதிமுக உருவாக்கப்பட்டபோது கலைஞரால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. சோதனையான கால கட்டங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜானகி பக்கபலமாக இருந்தார். அதிமுகவை வழி நடத்துங்கள் என ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தவர் ஜானகி. தொடர் தோல்விகளை சந்தித்த கட்சிதான் திமுக. திமுக 10 ஆண்டுகளாக தேர்தலில் தொடர் தோல்விகளை சந்தித்து இன்று ஆட்சியில் இல்லையா?
இருபெரும் தலைவர்கள் மறைந்தும் கூட இன்றைக்கும் நாம் குடும்பம் போல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறோம். அது தான் அதிமுக. அதிமுக ஒரு குடும்ப கட்சி. அதே போல், திமுக குடும்ப கட்சி என்று சொல்வார்கள். ஆனால், அது கலைஞருடைய குடும்ப கட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் அந்த கட்சிக்கு தலைவராக முடியும். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை யார் உழைக்கின்றாரோ, யார் விஸ்வாசமாக இருக்கின்றாரோ யார் வேண்டுமென்றால் இந்த கட்சிக்கு பொதுச் செயலாளர் ஆகலாம். அது போல், ஆட்சியிலும் ஒரு தொண்டர் கூட சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் முதல்வர் கூட ஆகலாம். இது தான் குடும்ப கட்சி. ஆனால், திமுகவில் அது இயலாது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வேறுபாடு இது தான்.
திமுகவும், அதிமுகவும் தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறது. ஆனால், அதிமுக தான் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. சுமார் 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறது. இந்த 31 ஆண்டுகால நல்லாட்சியில் தான் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் ஏற்றம் கண்டிருக்கிறது. அதிமுகவின் திட்டத்தால் மக்களுக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன. நாம் கோயிலாக வணங்கிய கட்டடத்தை சிலர் நுழைந்து சேதப்படுத்தினர். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. தேர்தலுக்கு 15 மாதங்கள் தான் உள்ளது. குறுகிய காலத்தில் தேர்தலுக்கு தயாராவோம்” என்று பேசினார்.