ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிலும், தடியடியாலும் படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவு அளித்த துணை வட்டாட்சியர் கண்ணன், கயத்தார் துணை வட்டாட்சியராகவும், மற்றொரு தனித்துணை வட்டாட்சியரான சேகர், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியராகவும் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி, இருவருக்கும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.