சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையுடன் இணைந்து ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.
விழா மேடையில் பேசிய அப்பாவு, “இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. ஆண்டுக்கு, 11,500 பேர் பிடிஎஸ், எம்பிபிஎஸ் படிப்பை படிக்கிறார்கள். 10,000 மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவர் அதை தாண்டி இருக்கக் கூடாது என்று மத்திய அரசு கொண்டு வந்தது. மக்களுக்கு விரோதமான திட்டங்கள் வந்தால் நாங்கள் எதிர்ப்போம். நீட் தேர்விற்கு நாங்கள் எதிரி இல்லை. ஆனால், அது எப்படி நடக்கிறது, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அது ஒரு தனியார் அமைப்பு. தனியார் அமைப்பிடம் நீட் தேர்வை கொடுத்திருக்கிறார்கள். இந்த ரோட்டரியிடம் கொடுத்திருந்தால் கூட தன்னலம் இல்லாமல் அந்த தேர்வை 100% நேர்மையாக நடத்தியிருப்பார்கள். தமிழ்நாட்டின் கல்விக்கட்டமைப்பை நீட் தேர்வு சீரழித்து விடுகிறது” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்துக்கு எதிர் கருத்து தான் சொல்ல முடியுமே தவிர எதிரானவர்கள் கிடையாது. நீட் தேவையில்லை என்பது தான் எல்லோருடைய கருத்து. அதில் முதல்வருக்கும் அதே கருத்து தான், அமைச்சர்களுக்கும் அதே கருத்து தான், இந்த அப்பாவுக்கும் அதே கருத்து தான். பொதுத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அரசு நடத்துவதற்கும், தனியாரிடம் நடத்துங்கள் என சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த சட்டம் கல்விக்கு எதிரானது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது நீட்” என்று தெரிவித்தார்.