நாகப்பட்டினம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி 16 லட்சம் மகளிருக்கு மாத மாதம் ரூ.1000 பணம் சென்று கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி இருக்கிறது. இதற்கு பெயர் தான் திராவிட மாடல் அரசு. இந்த திட்டத்தின் மூலமாக மகளிருடைய பொருளாதாரத்தை இந்த திராவிட மாடல் அரசு நிலைநிறுத்திருக்கிறது. இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு பொறாமை ஏற்பட தான் செய்கிறது.
அதிலும் குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமாக வயிற்றெரிச்சல். காலமெல்லாம் தமிழ்நாட்டிற்கு உழைத்த கலைஞருடைய பெயரை, ஏன் எல்லா திட்டத்துக்கும் வைக்கிறார்கள் என அவருக்கு வயிற்றெரிச்சல். அதனால் தான் எப்படியாவது நம்முடைய கூட்டணிகள் உடையாதா? எதிலாவது விரிசல் விழுந்திராதா? என்று காத்துக் கிடக்கிறார்.
ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்படி கடந்த 7 தேர்தல்களில் ஒரு வெற்றிக் கூட்டணி அமைத்தாரோ? கண்டிப்பாக தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வெற்றிக் கூட்டணியை, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை அமைப்பார். நாம் வெற்றிக் கூட்டணியோடு தொடர்ந்து கொண்டு போய் கொண்டிருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சி நிலைமை மோசமாக இருக்கிறது. ஒரு மூன்று நாட்களுக்கு முன்பு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டணிக்கு அழைத்தால் கோடிக் கணக்கில் பணம் கேட்கிறார்கள் என்று பொதுக்கூட்டத்திலே பேசுகிறார். இப்படி பேரம் பேசுக் கொண்டிருக்கும் கூட்டணி தான் அதிமுக கூட்டணி” என்று பேசினார்.