கரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க வேண்டுமானால் ஒருவருக்கொருவர் கைகொடுக்கும் ஆங்கில முறையைவிட்டு, தமிழர் பண்பாடான கையெடுத்து கும்பிடுவதை பின்பற்ற வேண்டும் என்று நடிகர் விவேக் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தில் பசுமை மீட்பு இளைஞர்கள் குழு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில், ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 5000 மரகன்றுகள் நடுவதற்கான தொடக்கவிழா நெடுவாசலில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட நடிகர் விவேக் முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான நிகழ்ச்சியை மரக்கன்றுகளை நட்டு துவங்கிவைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் என்பது காற்றினால் பரவும் வைரஸ் அல்ல என்றும் தொடுவதால் பரவக்கூடியது என தெரியவருகிறது. அதனால் நாம் ஒருவரை சந்திக்கும் போது கைகொடுப்பதை தவிர்த்து நமது பாரம்பரிய பண்பாடான கையெடுத்து கும்பிடுவதை பின்பற்றினால் வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் இதனை பின்பற்ற வேண்டும்.
அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல் கடந்த 10 ஆண்டுகளில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம், அதன் தொடர்ச்சியாக இன்று 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். தற்போது குழந்தைகள் செல்போன், கம்பியூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் மூழ்கி கிடக்கின்றனர். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. விளையாடுவதால் மட்டுமே உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க முடியும். அவர்களது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்" என தெரிவித்தார்.