சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடை மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
செங்கல்பட்டு செல்வதற்காக கடற்கரை பணிமனையில் இருந்து 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில், கடற்கரை ரயில் நிலையத்தில் முதலாவது ரயில் மேடைக்கு இன்று (24/04/2022) மாலை 04.25 மணிக்கு வந்துக் கொண்டிருந்தது. நிறுத்துமிடத்திற்கு அருகே ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தப் போது, கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரயில் இருந்து குதித்து ஓட்டுநர் உயிர் தப்பினார். அதேநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடுப்பையும் மீறி நடைமேடை மீது ஏறி நின்றது. அப்போது, தீப்பொறி எழுந்ததுடன், பயங்கர சத்தமும் கேட்டுள்ளது. இந்த விபத்தில் நடைமேடையில் இருந்த பயனில் இல்லாத இருகடைகள் சேதமடைந்தன. நடைமேடையில் மேற்கூரையும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் என்ஜினுடன் இணைந்த முதல் பெட்டியின் முன்பகுதி சேதமடைந்தது. அந்த பெட்டியும், அதற்கு அடுத்த பெட்டியும் தடம் புரண்டன. ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், பணிமனையில் இருந்து வந்த நிலையில், ரயிலில் பயணிகள் இல்லாததால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
விபத்து காரணமாக, கடற்கரை நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் மூன்றாவது நடைமேடையில் இருந்து புறப்பட்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே நிர்வாகத்தினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.