மோனோ ரயில் திட்டம் ரத்து: இயலாமையை ஒத்துக்கொண்ட பினாமி அரசுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அண்புமனி இராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் ரூ. 6402 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மோனோ ரயில் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சென்னைக்கு சற்றும் ஒத்துவராத இந்தத் திட்டத்தை செயல்படுத்தியே தீருவது என்பதில் உறுதியாக இருந்த தமிழக அரசு, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
தமிழக சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மின்துறை அமைச்சர் தங்கமணி,‘‘சென்னையில் குறுகிய சாலைகள் இருந்ததால் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டோம். அதற்காக டெண்டர் கோரப்பட்ட நிலையில், யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. சென்னையில் இடநெருக்கடி காரணமாகவும், மெட்ரோ ரயில் வழித் தடங்கள் நீட்டிப்பு பணி காரணமாகவும், ஒரே நேரத்தில் இரண்டு ரயில் திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்பதாலும், தற்போது மோனோ ரயில் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார். இத்திட்டத்தை நிறுத்தி தான் வைத்துள்ளோம்; கைவிடவில்லை என்று அமைச்சர் கூறுவது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு இணையான விளக்கம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. மோனோ ரயில் திட்டத்தை இனி செயல்படுத்த வாய்ப்பில்லை என்பதே உண்மை.
தமிழ்நாட்டில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் விரும்பவில்லை. அதுமட்டுமின்றி இது சாத்தியமில்லாத திட்டமும் ஆகும். 2001-ஆம் ஆண்டிலிருந்தே மோனோரயில் திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அப்போது இத்திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி போராட்டங்களை நடத்தியது. அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்கு தொடர்ந்ததால் இத்திட்டத்தை கைவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்தது.
ஆனால், 2011- ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மொத்தம் 300 கி.மீ தொலைவுக்கு மோனோரயில் பாதை அமைக்கப்படும் என்றும், முதல்கட்டமாக 111 கி.மீ. தொலைவுக்கு 3 பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் வண்டலூர் - புழல் இடையிலான 54 கி.மீ பாதையை தமிழக அரசே கைவிட்டு விட்டது. சென்னையில் பூந்தமல்லி - கத்திப்பாரா சந்திப்பு இணைப்புடன் போரூர் முதல் வடபழனி வரை 20.68 கி.மீ தொலைவுக்கு ரூ.3267 கோடியிலும், வேளச்சேரி முதல் வண்டலூர் வரை 20.80 கி.மீ தொலைவுக்கு ரூ. 3135 கோடியிலும் மோனோரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தால், மோனோரயில்களில் தினமும் 64,000 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இது சென்னையின் போக்குவரத்து நெரிசலை எந்த வகையிலும் குறைக்காது. அதுமட்டுமின்றி, போரூர் - வடபழனி சாலை தான் சென்னையில் மிகவும் குறுகலான நெடுஞ்சாலை ஆகும். அந்த சாலையின் மத்தியில் தூண்கள் அமைக்கப்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது.
இத்திட்டத்தை செயல்படுத்த கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால், ஒப்பந்தம் கோர சிலர் மட்டுமே முன்வந்ததால் அரசே அந்த நடைமுறையை ரத்து செய்தது. 2013ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், ஒப்பந்தம் எடுக்க எவருமே முன்வரவில்லை. 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் சில நாட்களில் மோனோரயில் திட்டத்திற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றார். ஆனால், அடுத்த சில நாட்களில் அவரது பதவி பறிபோனதே தவிர ஒப்பந்தம் கோரப்படவில்லை. மோனோரயில் திட்டத்தின் பயணம் அவ்வளவு வெற்றிகரமானது. இப்படிப்பட்ட திட்டத்தை தூசு தட்டி எடுத்தாலும் வெற்றி பெறாது என்ற உண்மையை அரசு மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டதால் மோனோரயில் திட்டத்தை கைவிடுவதாக இப்போது அறிவித்துள்ளது. மிகவும் தாமதமாகவாவது உண்மையை புரிந்து கொண்டு திட்டத்தைக் கைவிட்ட அரசுக்கு நன்றிகள்.
ஒரு திட்டத்தை தொடங்கும் போதே அதன் சாதக, பாதகங்களை நன்றாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். தனிநபர்களின் விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டால் இத்தகைய நிலை தான் ஏற்படும். சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைந்த செலவில் கட்டுப்படுத்த ஏராளமான திட்டங்கள் உள்ளன. மோனோரயில் திட்டத்திற்காக செலவிடப்படவிருந்த ரூ.6402 கோடியில் நான்கில் ஒருபங்கு தொகையில், அதாவது ரூ.1500 கோடியில் சென்னையில் 96.70 கி.மீ தொலைவுக்கு அதிவிரைவுப் பேருந்துத் திட்டத்தை (BRTS) செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியும். இதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் கடந்த 2013 ஆம் ஆண்டில் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் என்ற அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இத்திட்டத்தின் மூலம், ஒரு மணி நேரத்திற்கு 1.68 லட்சம் பேர் வீதம் ஒரு நாளைக்கு 25 லட்சம் பேர் எளிதாக பயணிக்க முடியும். எனவே, இனியும் தாமதிக்காமல் அதிவிரைவுப் பேருந்துத்திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.