சேலம் கோர்ட் ரோடு காலனி, எருமாபாளையம், பொன்னம்மாபேட்டை ஆகிய மூன்று இடங்களில், மாநகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமாக 23.59 ஏக்கர் நிலம் உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் மாநகராட்சிக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கும் நில உரிமை மாற்றம் செய்து, நில ஒப்படைப்பு செய்தல் தொடர்பாக துறை ரீதியான பிரச்சனைகள் இருந்து வந்தன. இந்த மூன்று இடங்களில் 763 குடும்பங்கள் வசிக்கின்றன. நில உரிமை மாற்றம் தொடர்பாக இரு துறைகளுக்கும் இடையே நீடித்து வந்த பிரச்சனைகளால், மேற்படி இடங்களில் வசித்து வரும் குடும்பத்தினர் தங்கள் சொத்தின் மீது பட்டா பெற முடியாத நிலை இருந்து வந்தது.
மேற்படி பகுதிகளில் உள்ள நிலத்திற்கு மொத்த நில கிரயத்தொகையாக 16.13 லட்சம் ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும் என நில மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. நிலத்திற்கு விதிக்கப்பட்ட தொகையை செலுத்திட வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மூன்று திட்டங்களுக்கும் சேர்த்து 23.59 ஏக்கர் நிலத்திற்கு உரிய நில கிரயத் தொகை நிலுவையை தற்போது செலுத்தி உள்ளது.
இதையடுத்து நில உரிமை மாற்றம் செய்து நிலத்தை ஒப்படைப்பது என்று முடிவானது. வீடுகளுக்கான உரிமை ஏதுமின்றி தவிக்கும் ஏழைகளின் நீண்ட கால பிரச்சனை, 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மேற்படி 3 இடங்களில் குறிப்பிட்டுள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களை நில உரிமை மாற்றம் செய்து, நில ஒப்படைப்பு உரிமையை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் வழங்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதா தேவி, மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் (திட்டம்) பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகர்ப்புறமா? நகர்ப்புரமா?:
இது தொடர்பாக சேலம் மாநகராட்சி நிர்வாகம், அனுப்பியுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில், நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்றே எல்லா இடங்களிலும் குறிப்பிட்டுள்ளது. நகரத்தையும், அதையொட்டியுள்ள பகுதிகளையும் குறிக்கும் சொல்தான், நகர்ப்புறம் ஆகும். இதை, காலம்காலமாக நகர்ப்பு'ற'ம் என்று வல்லின 'றகரம்' எழுத்துதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மாநகராட்சி வழங்கிய செய்திக்குறிப்பில் நகர்ப்புரம் என்று இடையின 'ரகரம்' எழுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக அரசும், நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று ரகர சொல்லைப் பயன்படுத்தித்தான், அரசின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. எனினும், நகர்ப்புறமா? நகர்ப்புரமா? என்பதை 'தமிழ் வாழ்க' என்ற முழக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் தெளிவுபடுத்த வேண்டும்.