சொத்துக்காக சொந்தபந்தங்களிடையே மனக்கசப்பு உருவாகி, நீண்டகால முன்பகை ஏற்பட்டு, அடிதடி, வெட்டுக்குத்து, கொலையில் முடிவதெல்லாம், சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான், சிவகாசிக்கு அருகிலுள்ள ஈஞ்சார் கிராமத்தில் நடந்துள்ளது.
சிவகாசி – ஈஞ்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு முத்தீஸ்வரன், முருகேஸ்வரி, முருகன், மணிகண்டன், ராஜேஸ்வரி, விநாயகமூர்த்தி ஆகிய 6 பிள்ளைகள் உள்ளனர். நீண்டகாலமாக இவர்களுக்கிடையே, குடும்பச் சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசி முடிவு எடுக்க, முத்தீஸ்வரன் அனைவரையும் அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஈஞ்சார் கிராமத்திலுள்ள முத்தீஸ்வரன் வீட்டில் ஒன்றுகூடி பேசியிருக்கின்றனர். அப்போது தகராறு மூண்டு, கம்பு, அரிவாள், கடப்பாறையால் ஒருவருக்கொருவர் தாக்கியுள்ளனர். இதில் கழுத்தறுபட்டு படுகாயம் அடைந்த முருகனை, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
படுகாயங்களுடன் முருகன் மனைவி இந்திராதேவி, இந்திராதேவியின் தாயார் பெரியதாய், மணிகண்டன் ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் தலையில் பலத்த காயமேற்பட்ட மணிகண்டனை, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கொலையில் முடிந்த தாக்குதல் சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, முத்தீஸ்வரனைக் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்களையும் தேடிவருகின்றனர்.