சென்னையில் சமீப காலமாக மின்சார ரயில்களில் சென்னையில் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வந்த இளம்பெண் பயணிகளிடம் திருடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்கும் பெட்டியில் திருடு போவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. குறிப்பாக வேலைக்கு போக மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் இருந்து கைப்பைகள்,நகைகள், மொபைல் போன் மற்றும் பணம் திருடப்பட்டு வந்துள்ளது. இதனால் பொருட்களை பறிகொடுத்த பெண் பயணிகள் இது குறித்த புகார்களை எழும்பூர் மற்றும் மாம்பலம் காவல் நிலையங்களில் கொடுத்து வந்துள்ளனர். தொடர்ந்து திருட்டு அதிகமாக நடந்து வந்ததால் மாறுவேடத்தில் மாம்பலம் காவல்துறையினர் ரயில் பெட்டிகளில் சில நாட்களாக கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து தினமும் சந்தேகம் எழும் வகையில் ஒரு இளம்பெண் ரயிலில் பயணித்து வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகத்துக்கு உரிய இளம்பெண்ணை காவல்துறையினர் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸார் விசாரணையின் போது அந்த பெண்ணின் பெயர் மோகனப்பிரியா என்பதும், அவர் பிரபல தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் மாணவி என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில் அந்த இளம்பெண் மோகனப்பிரியா, நான் தான் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து காவல்துறையினர் 4 கிராம் தங்க நகைகள், பல 500 ரூபாய் நோட்டுகள், மற்றும் சில கைப்பைகளை பறிமுதல் செய்துள்ளனர். பின்பு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகனப்பிரியாவை சிறையில் அடைத்துள்ளனர். கல்லூரி மாணவி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.