திருச்சி கண்டோன்மெண்ட் ரெனால்ட்ஸ் ரோடு பகுதியில் 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதன் கீழ் தளம் மற்றும் முதல் தளத்தில் 10 கடைகள் உள்ளன. மற்ற தளங்களில் 20 வீடுகள் உள்ளன. இங்கு 2-வது தளத்தில் ரகு (வயது 42) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். அவருடன் அவருடைய மனைவி அனிதா (வயது 39), மகன் மித்திலேஷ் (வயது 12) ஆகியோர் வசித்து வருகின்றனர். ரகு கிரஷர் நிறுவனம் வைத்து எம்.சாண்ட் உற்பத்தி செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இவருடைய வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் ஏ.சி. வெடித்து கட்டிலில் இருந்த மெத்தையில் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது மேலும், அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியதால் அருகில் குடியிருந்தவர்கள் கீழே இறங்கி வந்து நின்று கொண்டனர்.
பின்னர், திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவி மாவட்ட அலுவலர் (நிலையம்) சத்தியவர்த்தனன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது 3-வது மாடியில் தவித்த வயதான தம்பதியை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். தீ முழுமையாக அணைக்கப்பட்டதும் அனைவரும் மேலே சென்றனர். செசன்சு கோர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.