கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் சொத்துவரி உயர்வு குறித்து மேயர் பிரியா பேச அனுமதி அளிக்காததால் அதிமுக கவுன்சிலர்கள் பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 'சென்னையில் 2011 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில் 66.72 லட்சமாக இருந்த மக்கள்தொகை தற்பொழுது 88 லட்சமாக அதிகரித்துள்ளது.முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முடிந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் பாலின குழுக்கள் உருவாக்கப்படும். சென்னையில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1.86 கோடி ரூபாயில் இணையதள இணைப்பு வழங்கப்படும். கவுன்சிலருக்கான வார்டு மேம்பாட்டு நிதி 30 லட்சம் ரூபாயிலிருந்து 35 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 5,47 கோடி ரூபாயில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மாணவிகளுக்கு நிர்பயா நிதி மூலம் 22.36 கோடி ரூபாய் செலவில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும். பொதுமக்கள் சுலபமாகச் சொத்துவரியைச் செலுத்த கியூ.ஆர் கோட் (QR Code) அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.