கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று (மே 10, 2023) தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன. 224 தொகுதிகளில் 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி கர்நாடகத்தில் 52.03% வாக்குகள் பதிவாகிய நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி மொத்தமாக 65.69% வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தற்போது கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
224 தொகுதிகளை உடைய கர்நாடகத்தில் 113 இடங்களை பெறும் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் சுவர்ணா செய்தி நிறுவனம் காங்கிரஸ் 91 முதல் 106 இடங்களையும் பாஜக 94 முதல் 117 இடங்களையும் மஜத 14 முதல் 24 இடங்களையும் மற்றவை 2 முதல் 6 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் செய்தி நிறுவனம் காங்கிரஸ் 94 முதல் 108 தொகுதிகளையும் பாஜக 85 முதல் 100 தொகுதிகளையும் மஜத 24 முதல் 32 தொகுதிகளையும் மற்றவை 2 முதல் 6 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. டிவி9 பரத்வர்ஷ் காங்கிரஸ் 99 முதல் 109 தொகுதிகளையும் பாஜக 88 முதல் 98 தொகுதிகளையும் மஜத 21 முதக் 26 தொகுதிகளையும் மற்றவை 4 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஜீ செய்தி நிறுவனம் காங்கிரஸ் 113 முதல் 118 தொகுதிகளையும் பாஜக 79 முதல் 94 தொகுதிகளையும் மஜத 25 முதல் 33 தொகுதிகளையும், மற்றவை 2 முதல் 6 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது.