ஈரோடு தெற்கு மாவட்டதிற்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து திமுக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது வழிகாட்டுதலின்படி இளம் வயதினரை கட்சிக்கு ஈர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி தி.மு.க அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே விளக்கிப் பேசுவதற்கு கட்சியில் பல நூறு பேச்சாளர்கள் இருந்தாலும், புதிய இளம் பேச்சாளர்களை உருவாக்கும் விதமாக என் உயிரினும் மேலான எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் 17,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கேற்ற மாபெரும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதன் மூலமாக மாநில அளவில் 182 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் 3 இடங்களை நாமக்கல் ம.மோகநிதி, செங்கல்பட்டு ம.சிவரஞ்சனி, தஞ்சாவூர் ஜோ. வியானி விஷ்வா ஆகியோர் பிடித்துள்ளனர். அதே நேரத்தில் போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களும் சிறந்த பேச்சாளர்களாகவே உள்ளார்கள். அவர்களுக்கு பரிசுகள் வழங்கியதுடன் திமுக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறிமுகம் செய்யப்பட்ட இளம் பேச்சாளர்களை வைத்து கட்சி நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் சாதனை விளக்க பொதுக் கூட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதன்படி நவம்பர் 3 ஆம் தேதி முதல் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.கவுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிய இளம் பேச்சாளர்களை வைத்து சாதனை விளக்கக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. டிசம்பர் 15 ஆம் தேதி வரை இக்கூட்டங்கள் நடைபெறும். கூட்டங்களை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கட்சியின் முன்னணி பேச்சாளர்களும் கூட்டங்களை கட்சி நிர்வாகிகளோடு இணைந்து வழி நடத்துவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.