மனநல ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கவுன்சிலிங் வருபவர்கள் தங்களின் மனநிலையை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கிறார்.
கவுன்சிலிங் வருபவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை மனிதர்கள், கவுன்சிலிங் போக வேண்டுமா? என்ற போராட்ட எண்ணம் உடையவர்கள். மூன்றாவது நபர் சொல்லித் திருந்த வேண்டுமா? என்று யோசிப்பார்கள். அது முடியாத பட்சத்தில்தான் கவுன்சிலிங் வருவார்கள். பின்பு என்னிடம் வந்து, அவர்கள் செய்ததைச் சரி என்று பேசிவிட்டுப் போவார்கள். நான் எதாவது சொன்னால் அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார்கள். இந்த வகை மனிதர்களில் சிலர் தங்களை மாற்றிக்கொள்ள என்னிடம் வருவார்கள். ஆனால், அது எனக்குத் தெரியக் கூடாது என்று அவர் பக்கம் சரி என்று பேசுவார்கள். இரண்டாம் வகை மனிதர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அதற்காக அவர்களுடன் இருக்கும் 10 பேரைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பார்கள்.
மூன்றாம் வகை மனிதர்கள், தங்களின் தவறுகளை ஒப்புக்கொண்டு மற்றவர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்பார்கள். இந்த வகையான மனிதர்கள் கவுன்சிலிங் கொடுக்க ஏதுவானவர்கள். அவர்களுக்கு உடனே கவுன்சிலிங் கொடுத்துவிட முடியும்.முதல் மற்றும் இரண்டாம் வகை மனிதர்களிடம் பேசும்போது தங்களின் தவறுகளை என்னிடம் மறைத்து 40 நிமிடத்திற்கு மேல் கண்ணாம்பூச்சி விளையாடுவார்கள். தங்களை உத்தம புத்திரன் என்று சொல்லிக்கொள்வார்கள். நான் அவர்களின் தவறுகளைக் கண்டறிந்த பிறகு கூனி குறுகி உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் அந்த நிலைக்கு வரும்போது பார்க்க பரிதாபமாக இருக்கும்.
இந்த வகையான மனிதர்கள், டாக்டரிடமும் வழக்கறிஞரிடம் உண்மையைச் சொல்வதுபோல் கவுன்சிலிங் கொடுப்பவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும். அப்படி அவர்கள் தங்களிடமுள்ள தவறுகளை சொல்லும்போது, அவர்களுக்கான பதிலை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். இல்லையென்றால் அதைக் கண்டுபிடிக்கவே தனி கவுன்சிலிங் கொடுக்கவேண்டியதாக இருக்கும். தவறுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் நேரடியாக அடுத்து என்ன செய்வது என்று கேட்டுவிடவேண்டும். இந்த பக்குவ மனநிலையைத்தான் கவுன்சிலிங் கொடுப்பவர்கள் முதலில் எதிர்பார்ப்பார்கள். இரண்டாவது எதிர்பார்ப்பு, சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லிவிட வேண்டும்.
சுற்றி வளைத்து கதையாக சொல்லக்கூடாது. சில மனிதர்கள் 40 வருட வாழ்க்கையை எப்படி 1 மணி நேரத்தில் சொல்ல முடியும் என்று கேட்பார்கள். இதுதான் சரியான கேள்வி. ஏனென்றால் அந்த ஒரு மணி நேரத்திற்குள் பிரச்சனைகளை சொல்லிவிட்டால் கவுன்சிலிங் கொடுப்பவர்கள் எளிதாக அவர்களை கையாளமுடியும். அவசியமற்ற விஷயங்களைத் தவிர்த்து சொல்ல வந்ததை சரியாகச் சொன்னால் கவுன்சிலிங் கொடுப்பவர்களுக்கும் அதைப் பெற்றுக்கொள்பவர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் அழகாக இருக்கும்.
கவுன்சிலிங் கொடுப்பவர்களின் மூன்றாவது எதிர்பார்ப்பு என்னவென்றால், மொபைல்களை முடிந்தளவிற்கு எடுத்து வராமல் இருப்பது. இல்லையென்றால் சுவிட்ச் ஆஃப் செய்வது. இதைச் செய்தால் கவுன்சிலிங் கொடுப்பவர்களுக்கு இடையூறு ஏற்படாது. அடுத்ததாகப் பிறரைக் குற்றப்படுத்தும் மனிதர்கள் கவுன்சிலிங் வராமல் இருப்பதே சிறந்தது. இதுபோன்ற மனிதர்கள் 30 முக்கிய விஷயங்களை எங்களிடம் சொல்ல வந்தால் அதில் 29 விஷயங்கள் அடுத்தவர்களைப் பற்றிய குறை மட்டும் இருக்கும். ஒரே ஒரு விஷயம் மட்டும் அவர்கள் தவறு செய்ததாகவும் அதுவும் சின்ன தவறுதான் என்று சொல்ல முயற்சிப்பார்கள்.
சில கவுன்சிலிங் கவிதை மாதிரி முடிந்துவிடும். ஆனால், கேட்பதற்கு அசிங்கமாக இருக்கும். அந்தளவிற்கு அவர்கள் செய்த தவறுகளை நேரடியாகச் சொல்லிவிடுவார்கள். இதுபோல சொல்லிவிட்டால் கவுன்சிலிங் கொடுத்து சீக்கிரமாகவே அவர்களை நல்ல விதமாக மாற்றிவிட முடியும். அடுத்ததாக சில மனிதர்கள் அவர்கள் பார்வையைச் சொல்லி கவுன்சிலிங் கொடுப்பவர்களின் பார்வைகளை தடுத்துவிடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதர் என்னிடம் வந்தார், அவரைப் பார்த்து நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். அதற்கு அவர் ஏன் சிரிக்கிறீர்கள்? என்றார். பின்பு நான் பணத்தையும் கொடுத்து நீங்களே உங்களைச் சரி என்று பேசிக்கொள்கிறீர்கள் அதனால்தான் சிரித்தேன் என்றேன். இதைக் கேட்டதும் அவர் பொறுமையாக நான் சொல்வதைக் கேட்டுவிட்டு என் பார்வையை பெற்றுக்கொண்டு அவருக்கான தீர்வை நோக்கி அவரே சென்றார்.
எப்போதுமே தீர்வு உடனே கிடைத்து விடாது. கவுன்சிலிங் கொடுத்ததை வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க வேண்டும் அதற்கு சில காலங்கள் ஆகும். கவுன்சிலிங் வரும்போது குழந்தைகளை அழைத்து வர வேண்டாம். குழந்தைகளை முடிந்தளவிற்குத் தெரிந்த நண்பர்களிடம் விட்டு வாருங்கள். இல்லையென்றால் கவுன்சிலிங் கொடுப்பதற்கு பெரிய இடையூறாக இருக்கும். அதே போல் தங்களுக்கு நெருக்கமானவர்கள் அருகில் இருக்கிறார்கள் என்று பொய் சொல்லக் கூடாது. உண்மையைப் பேசுவதற்கு தனியாகப் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டுவிட வேண்டும். இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்கள் தங்களுக்கான தீர்வை அவர்களாகவே கவுன்சிலிங் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.