திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மாநகர வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம் திண்டுக்கல் மாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா தேர்தல் பார்வையாளர் கோபால்சாமி, மேயர் இளமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஐ.பி.செந்தில்குமார் பேசும்போது, “தி.மு.க. என்ற மிகப்பெரிய ஆலமரம் அண்ணா காலம் தொட்டு முதல்வர் கலைஞர் மற்றும் இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக கட்சி தொடங்கிய சிலர் திமுகவை அழித்தே தீருவேன் என பேசி வருகின்றனர். அரசியல் சூழலில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் திமுகவை அழித்துவிடலாம் என்று நினைத்தால் காணாமல் போய்விடுவார்கள். மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
கேரளாவிற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றபோது தான் மத்திய அரசுக்கு எதிராக நீட் உள்ளிட்ட திட்டங்களை எதற்காக எதிர்க்கிறோம் என்று பதிவு செய்தார். அதன்பின்பு தான் மாநில நலன் பாதிக்கப்படுவதை உணர்ந்து கேரளா சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது” என்று கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், பிலால் உசேன், பகுதி செயலாளர்களான ராஜேந்திரகுமார், பஜ்லுஹக், ஜானகிராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், முருகானந்தம் மற்றும் மாவட்ட விவசாய அணி தலைவர் இல.கண்ணன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.