வட மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் சீமான் மீது கே.எஸ். அழகிரி சரமாரி குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார்.
தமிழகத்தில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அப்படி யாரும் தாக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள். அவர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “வடமாநில தொழிலாளர்கள் குறித்து ஒரு சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டு அதை செய்கிறார்கள். அந்த ஒரு சிலரும் வேறு யாரும் அல்ல. இருவர் தான். ஒன்று பாஜக ஆர்.எஸ்.எஸ். அவர்கள் மறைமுகமாக செய்கிறார்கள். சீமான் வெளிப்படையாக செய்கிறார். முதலமைச்சர் நேரடியாக அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் தன் விளம்பரத்திற்காக தமிழக மக்களுக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சனையை தூண்டி விடும் அளவிற்கு செயல்படுகிறார். அவருடைய பல்வேறு உரைகள் அவருக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு மோசமாக உள்ளன. தொழிலாளர்களுக்கு ஜாதி, மதம், மொழி கிடையாது. ஒரு வேளை சோற்றுக்காக இங்கு உழைக்க வருகிறார்கள். தமிழர்கள் வேறு மாநிலங்களில் வேறு நாடுகளில் பணி புரிகிறார்கள். அவர்களுக்கு எதிராக இது நடந்தால் நாம் என்ன செய்வோம். இது தவறல்லவா? தமிழக அரசு உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீகாரில் பாஜக பேசியதால் அது தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பிரச்சனைக்கு காரணம் இந்த ஊரில் சீமான் தான். 10 வருடமாக அவர் ஒரு விஷயத்தை பேசி வந்தால் அது நியாயமாகி விடுமா. ரயில்வே, வங்கிகளில் பணி புரிபவர்களது சூழல் வேறு. அதை நாம் எதிர்க்கிறோம். பாராளுமன்றம் வரை போய் அதுகுறித்து பேசியுள்ளோம். ஆனால் தொழிலாளர்கள் அப்படி அல்ல.” எனக் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் உடனிருந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன், “சீமான் சொன்னாலும் அதான் பதில் சீமாட்டி சொன்னாலும் அதான் பதில்” எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.