தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை பாஜக என்ற வகையிலும், அரசியல் எதிரி திமுக என்ற வகையிலும் பேசி இருந்தார். மேலும், விஜய் தன்னுடைய உரையில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்த நிலத்தைக் கெடுக்கும் நச்சு ஆலைகளை ஸ்டெர்லைட், மீத்தேன், ஈத்தேன் என எல்லா நச்சு திட்டங்களையும் திராவிடம் அனுமதிக்கும். நிலத்தின் வளத்தைப் பாதுகாக்க தமிழ் தேசியம் துடிக்கும். எதிர்த்து போராடும். இரண்டும் ஒன்றா? எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ் தேசியம். திராவிடம் தமிழை திட்டமிட்டு அழிக்கும். இரண்டும் ஒன்றா? தமிழ் பிள்ளைகள் படிக்க வேண்டும். கல்வி என்பது மானிட உரிமை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இது தமிழ் தேசியம். இந்த நாட்டு குடிமக்கள், பள்ளி, கல்லூரி போகின்ற மாணவர்கள், உழைப்பவர்கள் எல்லாரும் குடிக்க வேண்டும் இது திராவிடம். இரண்டும் ஒன்றா? எப்படி ஒன்றாகும்? என கடுமையாக விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் த.வெ.க மற்றும் நாதக கட்சியினரிடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், விஜய்யின் வருகையால் நாம் தமிழர் கட்சியின் கூடாராம் காலியாகும் என சீமானுக்கு அச்சம் வந்துவிட்டதாகக் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடிகர் விஜய் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்துவிட்டதால், விஜய் குறித்து சீமான் விமர்சித்து வருகிறார். தனது ஆதரவாளர்கள் தன்னை விட்டு சென்றுவிடுவார்கள் என்ற கவலை சீமானுக்கு வந்துள்ளது. விஜய்யின் வருகை தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது. புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் ஆளுகின்ற கட்சியை மட்டுமே விமர்சித்து, எதிர்ப்பு அரசியல் நடத்துவது வழக்கம். அதையே விஜய் கையிலெடுத்துள்ள நிலையில், அதனை ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.