புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலம் பயணித்தவர்கள் சில மாதங்களாக கருத்து மோதல்களாலும், கருத்து வேறுபாடுகளாலும் ஒதுங்கியும், ஒதுக்கியும் இருந்த நிலையில்., அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை கிளையைத் தொடங்க உள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் சிபிஐ பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடந்தது. 25ம் தேதி பேரணி, மாநாடு நடத்தி கட்சியைத் தொடங்குவதாக முடிவெடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நக்கீரன் இணையத்தில் கடந்த 22 ஆம் தேதி ‘உதயமாகும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர மாவட்டக் குழு கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் ராசேந்திரன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செங்கோடன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் தேசியக்குழு உறுப்பினர் சிவபுண்ணியம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து, உத்திராபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதாகவும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும், கட்சி மற்றும் தொழிற்சங்கத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டு கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் புதுக்கோட்டை எம்.என்.ராமச்சந்திரன், ஆலங்குடி சொர்ணக்குமார் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் யாரெல்லாம் கட்சிக்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள் என்பது பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.