Skip to main content

சாம்பியன்ஸ் டிராபி தொடர் : கோப்பையை வென்ற இந்திய அணி; குவியும் பாராட்டு!

Published on 09/03/2025 | Edited on 09/03/2025

 

Champions Trophy Series Indian team wins the trophy heaps of praise

சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி துபாயில் இன்று (09.03.2025) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களை குவித்தது. அதாவது நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 101 பந்துகளில் 63 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 53 ரன்களும், ரச்சின் ரவிந்தரா 29 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 252 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல 252 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அந்த வகையில் 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களை எடுத்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். மேலும் ஸ்ரேயஸ் ஐயர் 62 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். கே.எல். ராகுல் 33 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 ரன்களை எடுத்தார். சுப்மன் கில் 50 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியை நாடு முழுவதும் உள்ள கிரிகெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடர் ஆட்டநாயகன் விருது நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்தராவுக்கும், ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய  கிரிக்கெட் அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகத்தான வெற்றி பெற்ற இந்திய வீரர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான இதயங்களைப் பெருமையால் நிரப்பியுள்ளீர்கள்.

அற்புதமான தனிப்பட்ட செயல்திறன் மற்றும் களத்தில் அபார ஆதிக்கம் செலுத்தியதன் மூலம் இந்திய அணி இந்தப் போட்டியின் அற்புதமான ஓட்டம் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக உள்ளது. சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் தமிழக ஆளுநர் மாளிகையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற சாம்பியனான இந்திய அணிக்கு பாராட்டுக்கள். திடமான மன உறுதி, துல்லியம் மற்றும் தளராத மனப்பான்மையுடன், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025ஐ மீட்டு ஒவ்வொரு சவாலையும் அற்புதமாக வென்று, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளீர்கள்.

Champions Trophy Series Indian team wins the trophy heaps of praise

இது வெறும் வெற்றி என்பதை தாண்டி அதையும் விட அதிகமாகும். இது இந்தியாவின் கிரிக்கெட் சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒவ்வோர் இந்தியரின் இதயத்தையும் மிகுந்த பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரப்புகிறது. மேலும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட்டை ரசிக்கும் ஒவ்வொருவரின் அபிமானத்தைப் பெறுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி சாம்பியன் டிராபி  கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

Champions Trophy Series Indian team wins the trophy heaps of praise

இது ஒரு அற்புதமான போட்டியாக இருந்தது. இந்திய வீரர்கள் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தி தகுதியான வெற்றியைப் பெற்றனர். இந்திய அணிக்கு சபாஷ்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சாம்பியன்ஸ் டிராபி 2025ஐ வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனப் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.