
பீகார் மாநிலம் அர்ரா என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளனர். மேலும் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு 25 கோடி ரூபாய் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த கொள்ளை சம்பவம் நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
நகைக்கடையில் துப்பாக்கி முணையில் மிரட்டி கொள்ளை சம்பவம் அரங்கேறிய செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போஜ்பூர் காவல்துறை சார்பில் தெரிவிக்கையில், “கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளைப் பீகார் போலீசார் கைது செய்துள்ளனர். அரபாபுராவிலிருந்து டோரிகஞ்ச் நோக்கி மூன்று மோட்டார் சைக்கிள்களில் சந்தேகத்திற்கிடமான ஆறு நபர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களைச் சிறிது தூரம் துரத்திய பிறகு, குற்றவாளிகள் காவல்துறையினரை நோக்கிச் சுட்டனர்.
அப்போது அதற்கு காவல்துறையினர் பதிலடி கொடுத்ததில் இரண்டு குற்றவாளிகள் காயமடைந்தனர். அவர்களின் கால்களுக்கு அருகில் சுடப்பட்டனர். இந்த சம்பவத்தில், இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.