
பாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் கோவிந்தா, தமிழில் ‘த்ரி ரோஸஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்தார். சினிமாவை தவிர்த்து அரசியலிலும் கவனம் செலுத்திய இவர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் உலகளவில் ஹிட்டடித்த அவதார் படத்தின் தலைப்பை அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு நான் தான் சொன்னேன் என தற்போது கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “அமெரிக்காவில் நான் ஒரு சர்தார்ஜியைச் சந்தித்தேன், அவருக்கு தொழில் ரீதியாக ஒரு ஐடியாவை கொடுத்தேன். அது வெற்றி பெற்று விட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சர்தார்ஜி என்னை ஜேம்ஸ் கேமரூனை சந்திக்க வைத்தார். மேலும் ஜேம்ஸ் கேமரூடன் சேர்ந்து ஒரு படம் பண்ண சொன்னார். அதனால் அதைப் பற்றி விவாதிக்க அவர்களை இரவு உணவிற்கு அழைத்தேன். அப்போது ஜேம்ஸ் கேமரூனுக்கு ‘அவதார்’ என்ற தலைப்பை நான் தான் சொன்னேன். படத்தில் வரும் ஹீரோ மாற்றுத்திறனாளி என்று ஜேம்ஸ் என்னிடம் கூறினார், அதனால் நடிக்க முடியாது என்றேன். அவர் எனக்கு ரூ.18 கோடி வழங்குவதாக தெரிவித்து 410 நாட்கள் நடிக்க வேண்டும் என்றார். அதற்கு ஒப்புக்கொண்டு நடித்திருந்தால் நான் மருத்துவமனையில் தான் இருந்திருப்பேன்.

நம்மிடம் இருக்கும் ஒரே கருவி நம் உடல் மட்டும்தான். சில சமயங்களில், சில விஷயங்கள் தொழில் ரீதியாக மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம், ஆனால் அவை நம் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில நேரங்களில், ஒரு படத்திற்கு மறுப்பு தெரிவித்ததற்காக பல ஆண்டுகளாக அந்த குழுவினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும். அவர்கள் நெருக்கமாக இருந்தாலும் ஈகோக்கள் இருக்கும்” என்றார்.