
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மாவட்டப் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கணொளி காட்சி மூலம் நேற்று (09.03.2025) நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, விருதுநகர், ஈரோடு என பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.

இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மேட்டுப்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் என மொத்தம் 87 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ‘கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் அதிமுக யாருடன் கூட்டணி வைக்கிறது என்பது குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொறுப்பாளர்களை உடனடியாக நியமித்து சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க வேண்டும். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கோஷ்டி பூசல் இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2:15 மணி வரை நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்காமல் அங்கிருந்து சென்றார். மேட்டுப்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜு, ''இது கருத்து சொல்வதற்கான கூட்டம் இல்லை. கையெடுத்து கும்பிடுறேன் கிளம்புங்க'' எனக் கூறி நகர்ந்தார்.

மொத்தமாக நான்கு மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் செங்கோட்டையன் தரப்பிடம் எடப்பாடி எந்த கருத்தும் கேட்கவில்லை என்றும் கூட்டத்தின் இறுதில் சம்பிரதாயத்துக்காக செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோருக்கு நன்றி மட்டும் கூறியதாகக் கூறப்படுகிறது. அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி இருந்தது. இருவருக்கு இடையே முரண் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை செங்கோட்டையன் மறுத்திருந்தார். இந்நிலையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் செங்கோட்டையனிடம் எடப்பாடி 'மவுனம்' காட்டி இருப்பதும் மீண்டும் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.