
உணவுக்காக ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை கொல்லும் முறையை இஸ்லாமிய மதப்படி ‘ஹலால்’ என்று சொல்லைக் குறிக்கும். ஹலால் முறைப்படி விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே அதன் இறைச்சியை இஸ்லாமியர்கள் உண்பார்கள். ஹலால் முறைப்படி கொல்லப்படும் இறைச்சியை, இந்து சமூக மக்களுக்கு வழங்கப்படுகிறது என பா.ஜ.கவினர் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இதனால், வட மாநிலங்களில் கரைசேவர்கள் இஸ்லாமிய மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹலால் முறை போலவே, இந்து சமூக மக்களுக்கு ‘மல்ஹார் சான்றிதழ்’ என்று புதிய முறையை மகாராஷ்டிராவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா மீன்வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே கூறியதாவது, “இன்று நாங்கள், மகாராஷ்டிராவில் உள்ள இந்து சமூகத்திற்காக ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளோம். இந்துக்களுக்காக ஜட்கா ஆட்டிறைச்சியை விற்கும் ஆட்டிறைச்சி கடைகளை, இந்துக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த சிந்தனை வந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஜட்கா ஆட்டிறைச்சி கடைகளையும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மல்ஹார் சான்றிதழின் கீழ் பதிவு செய்யப்படும்.
இந்த மல்ஹார் சான்றிதழை அதிகமாக பயன்படுத்த வேண்டும். மல்ஹார் சான்றிதழ் இல்லாத கடைகளில் இந்துக்கள் ஆட்டிறைச்சியை வாங்கக் கூடாது. இதை நான் மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். ஜட்கா இறைச்சி, வலியற்ற முறையில் ஒரே அடியில் விலங்கைக் கொன்ற பிறகு தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.