
ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் 25-ம் ஆண்டு கட்சி கொடிநாள் வெள்ளி விழா, உலக மகளிர் தினவிழா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாநகர மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்டச் செயலாளர் சிவக்குமார், கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜவகர், வக்கீல் அணி துணை செயலாளர் பாக்கிய செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக வலைத்தள அணி துணை செயலாளர் மகேந்திரன், தெற்கு பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய பிரேமலதா விஜய காந்த், எனக்கு பிடித்த மாவட்டம் திண்டுக்கல்; திண்டுக்கல் என்று சொன்னாலே அது ‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் கோட்டை’ என்று சொன்னால் அது மிகையல்ல. தலைவருடன் நான் திண்டுக்கல்லுக்கு வரும் போதெல்லாம் மக்கள் வெள்ளம் தான் அவரை வரவேற்கும். அத்தனை பாசம் கொண்டவர்கள் திண்டுக்கல் மக்கள்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகும் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். எனக்கும், மறைந்த தே.மு.தி.க. தலைவருக்கும் மிகவும் பிடித்த மாவட்டம் திண்டுக்கல் தான். நமது தலைவர் எங்கும் செல்லவில்லை. என் மக்களே... என் மக்களே... என்று உங்களுக்காகவே உழைத்து உங்களுக்காகவே வாழ்ந்து உங்களுக்காகவே மறைந்தவர் விஜய காந்த். தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என்றார்.

திண்டுக்கல் பிரியாணி உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. உலகில் எந்த நாட்டுக்கு நாம் சென்றாலும் அங்கும் திண்டுக்கல் பிரியாணி கிடைக்கும். நமது தலைவருக்கும் பிடித்த உணவு திண்டுக்கல் பிரியாணி. அவர் திண்டுக்கல்லுக்கு வரும் போதெல்லாம் திண்டுக்கல் பிரியாணியைச் சுவைக்காமல் திரும்ப மாட்டார். கட்சி நிர்வாகிகள்(நேற்று) எனது பிறந்தநாள் என்று கூறுகிறார்கள். எனக்கென்று எந்த விழாவும் இல்லை. நமது தலைவர் என்றைக்கு மறைந்தாரோ அன்றே என்னுடைய எல்லா விழாக்களும் முடிந்துவிட்டது. இனி நான் வாழும் வாழ்வு உங்களுக்காக தான். என் மக்களுக்காக தான்.
நமது தலைவர் தமிழ் மீது மிகப்பெரிய பற்று வைத்திருப்பவர் என்பது உங்களுக்கு தெரியும். அவர் நினைத்து இருந்தால் எத்தனையோ மொழி படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என்று காலம் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். நமது தலைவரை நான் திருமணம் செய்து 32 ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் அவருடைய மனைவியாக வாழ்ந்ததைவிட அவருக்கு தாயாக தான் வாழ்ந்திருக்கிறேன். அவரை என் செல்லக் குட்டி’ என்று தான் அழைப்பேன். (இப்படி கூறும் போதே குரல் உடைந்து அழுகிறார்). நமது தலைவரை தவற விட்டுவிட்டோமே என்று வருந்தாதீர்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு வரும். அன்று நீங்கள் நமது தலைவரின் பிள்ளைகள் என்பதை உங்கள் ஒற்றை விரலால் நிரூபித்துக் காட்டுங்கள் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
திண்டுக்கல் பெயரளவில் தான் மாநகராட்சியாக இருக்கிறது. எந்த அடிப்படை வசதியும் இல்லை. சிறுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. யார் அந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள்? என்று சொல்லாமல், விவசாயத்துக்கு கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து இந்த சம்பவம் நடந்தது என்று கூறுகிறார்கள். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை போல் இருக்கிறது. மக்களை காக்க வேண்டும் உண்மையில் அங்கு இருக்கும் வெடிகுண்டுகள் வெடித்தால் சிறுமலை என்ற மலையே இருக்காது. கொலை நகரமாக திண்டுக்கல் இருக்கிறது என்று கூறுகிறார்கள். போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து சட்டம், ஒழுங்கை சீர்படுத்தி மக்களை காக்க வேண்டும். இந்த பொறுப்பு தமிழக அரசுக்கும் உள்ளது.

பாரதிபுரத்தில் பள்ளிக்கூட மேற்கூரை பெயர்ந்து விழுந்து 5 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விவகாரத்திலும் உண்மை மூடிமறைக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளி கட்டிட மேற்கூரையைக் கூட சீர்படுத்த முடியாத அளவுக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனையும் படு ஜோராக நடக்கிறது. எனவே இந்த அரசு சட்டம், ஒழுங்கை சீர்செய்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இக்கூட்டத்தில், பெண்களுக்கு தையல் எந்திரம், ஆடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார். இதில் அவைத்தலைவர் இளங்கோவன், துணை செயலாளர் பார்த்தசாரதி, உயர்மட்டக்குழு உறுப்பினர் பாலன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.