நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் நேற்று தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக திமுக தலைமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தினை அறிவித்திருந்தது.
இன்று மாலை கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில் அதன்படி தற்பொழுது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். 21 மாநகராட்சிகளில் உள்ள 1,300 க்கும் மேற்பட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட இருக்கின்றனர். இதில் குறிப்பிட்ட அளவை மட்டும் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்துவிட்டு மீதம் இருக்கும் இடங்களில் திமுகவே போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட 12,000 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதில் கிட்டத்தட்டப் பத்தாயிரத்துக்கும் அதிகமான வார்டுகளில் திமுக போட்டியிட வேண்டுமென திமுக தலைமை விரும்புவதாக தெரிகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்கள், பரப்புரை வியூகம், களநிலவரம் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.