Published on 13/08/2019 | Edited on 13/08/2019
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)- 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வேலூர் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அதிமுக வேட்பாளரும் புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதோடு தேர்தலில் நான் தோல்வி அடைந்ததற்கு முத்தலாக் சட்டமும், 370வது பிரிவை நீக்கியதும் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஏ.சி.சண்முகம் தோல்விக்கு பாஜக காரணம் இல்லை என்று கூறியுள்ளார். இது பற்றி விசாரித்த போது, வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் வாணியம்பாடி பகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரை விட 20ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வாங்கியதே இந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைய முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர். அதனால் தான் ஏ.சி.சண்முகம், தான் தோல்வி அடைந்ததற்கு பாஜக கொண்டு வந்த திட்டம் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.