தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இவர், கடந்த 13ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள குமரன் திருநகரில், தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை, காமராஜபுரம், கருணாநிதி நகர், செல்லாண்டி அம்மன் கோயில் தெரு, நாராயண பிள்ளை தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
காமராஜர் புரத்தில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர், “குடும்பத் தலைவிகளுக்கு வருடந்தோறும், 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு சிலிண்டரின் விலை 4,800 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை உள்ளது என்றார். தொடர்ந்து வீடுதோறும் சோலார் அடுப்பு வழங்கப்படும். இந்த சோலார் அடுப்புக்கு மின்சாரம், டீசல் தேவை இல்லை” என்று கூறினார். இதனைக் கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ச்சியாக வனத்துறை அமைச்சர் தேர்தல் பரப்புரையில் உளறிக் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
தொடர்ந்து ஐயன்குளம் பகுதியில், பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, அப்பகுதி பொதுமக்கள், ‘நாங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்’ என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துகொடுக்க வேண்டும்’ என்றும் கேட்டனர். இதற்கு வனத்துறை அமைச்சர், குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக வேறு இடத்தில் உங்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று பதில் கூறிவிட்டுச் சென்றார்.