Skip to main content

'ஆளுநர் அரசியல் பேசக்கூடாது' - பாஜக அண்ணாமலை

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

nn

 

அண்மையில் தொடர்ச்சியாகத் தமிழக அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து முரண்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் இன்னும் அதிகரித்தது. தொடர்ந்து எதிர்ப்பின் காரணமாக ஆளுநர் மாளிகையின் அந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் புதுச்சேரி ஆளுநரும் அவ்வப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்து புதுச்சேரி அரசிற்கும் தனக்கும் இருக்கும் மோதல் விவகாரங்கள் குறித்து விளக்கமளித்து வருகிறார். அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ரங்கசாமிக்கும் எனக்கும் இடையே இருப்பது அண்ணன் தங்கை பிரச்சனை என விளக்கமளித்திருந்தார். அதேபோல் தெலுங்கானா ஆளுநராகவும் தமிழிசை அவ்வப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர்கள் அரசியல் பேசுவது குறித்த கேள்விக்கு, ''தமிழக ஆளுநர் பத்திரிகையாளர்களை சந்தித்தால் என்னை விட மகிழ்ச்சியான ஆள் யாரும் கிடையாது. ஏனென்றால் திமுகவின் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் வெளியே வரும். ஆனால் சந்திக்கக் கூடாது என்பது எங்களுடைய கருத்து. காரணம் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் தெளிவாக இருக்கிறோம். ஆளுநர் அவருடைய கடமையை மட்டும் தான் செய்ய வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை ஆளுநர்கள் பத்திரிகையில் பிரிண்ட் ஃபார்மெட் இன்டர்வியூ கொடுப்பார்கள். அப்படித்தான் இத்தனை காலமாக ஆளுநர்கள் இருந்தார்கள். மற்ற ஆளுநர்களை பற்றி நான் கமெண்ட் கொடுக்க விரும்பவில்லை. 

 

திமுக தவறு செய்திருந்தால் அதை பாஜக கிரிட்டிசைஸ் பண்ணுவது வேறு, ஆளுநர் கிரிட்டிசைஸ் பண்ணுவது வேறு. ஆளுநர் கிரிட்டிசைஸ் பண்ணும் பொழுது ஆக்கப்பூர்வமாக பேசலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பிரிண்ட் ஃபார்மேட்  இன்டெர்வியூவில்  சொல்லலாம். ஆனால் தினம் தினம் ஆளுநர்கள் என்னைப் போல் பேச ஆரம்பித்தால் ஆளுநர் என்ற தகுதிக்கு மாண்பு இல்லாமல் போய்விடும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும்... கூட ஆளும் கட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாங்கள் குற்றச்சாட்டை மக்கள் மன்றத்தில் வைக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆளுநர் அதே குற்றச்சாட்டை வைத்தால் மரபு சரியாக இருக்காது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“போலீசாரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது” - மேற்குவங்க ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
West Bengal Governor's sensational allegation on police

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸுக்கும் இடையே சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏற்கெனவே, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையில், தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை சின்னத்தை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இப்படிபட்ட பரபரப்பான மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும், மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தான் பாதுகாப்பாக இல்லை என ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக நேற்று (20-06-24) கொல்கத்தாவில் ஆளுநர் சி.வி.ஆனந்த்போஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தற்போதைய பொறுப்பதிகாரி மற்றும் அவரது குழுவினர்களால்  எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நான் நம்புகிறேன். ராஜ்பவனில் கொல்கத்தா காவல்துறையினரிடம் நான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜியிடம் தெரிவித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்கள் எனது நடமாட்டத்தையும், எனது அதிகாரிகள் பலரையும் கண்காணித்து வருகின்றனர். அவர்களின் செயல்கள் அரசாங்கத்தில் உள்ள அவர்களின் அரசியல் எஜமானர்களின் மறைமுக ஆதரவுடன் உள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும்” என்று கூறினார். 

Next Story

'கள்ளச்சாராய உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது'-தமிழக ஆளுநர் இரங்கல்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 16 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்னர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், 'கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அவ்வப்போது கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்த செய்திகள் வெளிவருகின்றன. சட்டவிரோத மதுபான தயாரிப்பு, நுகர்வை தடுப்பதில் உள்ள குறைபாட்டை இது பிரதிபலிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் விவரம்: சுரேஷ், பிரவீன், மற்றொரு சுரேஷ், தனக்கொடி, வடிவு, சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா, நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி, டேவிட்.