அதிகாரத்திற்கு எதிராக மக்கள் படும் இன்னல்களை நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்து அவர்களின் வலியைக் கட்டுரை மூலமாகவும், தனது பேச்சின் மூலமாகவும் வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்திவரும் அருந்ததி ராய்க்கு கடந்த 1997 ஆம் ஆண்டு புனைவு இலக்கியத்திற்காக எழுத்தாளர்களுக்காகக் கொடுக்கப்படும் உலகின் மிக உயரிய விருதான ‘புக்கர் விருது’ கொடுக்கப்பட்டது. அவர் எழுதிய ‘காட் ஆஃப் திங்ஸ்’ என்ற முதல் புத்தகத்திலேயே புக்கர் விருது பெற்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். முதன் முதலில் இந்தியாவில் புக்கர் விருது பெற்றவர் என்ற பெருமையும் அருந்ததி ராய்க்கே கிடைத்தது.
இதனிடையே கடந்த 1989 ஆம் ஆண்டு ‘இன் விச் ஆனி கிவ்ஸ் தோஸ் ஒன்ஸ்’ என்ற படத்திற்குச் சிறந்த திரைக்கதை எழுதியதற்காக அருந்ததி ராய்க்குத் தேசிய விருது கொடுக்கப்பட்டது. அதனைக் கடந்த 2015 ஆம் ஆண்டு, இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பதைக் குற்றமாகச் சித்தரித்து மதவெறி அமைப்புகள் வன்முறை நடத்துகின்றனர். இந்தியாவில் பட்டியலின மக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு வித பயத்தில் இருக்கின்றனர். மனிதர்கள் கொல்லப்படுகின்றனர், எரிக்கப்படுகின்றனர்” என்று கூறி தனது தேசிய விருதை திருப்பிக் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
குஜராத் நர்மதா அணையின் உயரத்தை அதிகரிப்பதை எதிர்த்துப் போராடிய பழங்குடி மக்களுக்கு ஆதரவாக அருந்ததி ராய் குரல் கொடுத்தார். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அரசுக்கு ஆதரவான தீர்ப்பை அளித்த நிலையில் நாகரீக வன்முறை என்று விமர்சனம் செய்தார். இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், மண்ணிப்பு கேட்க மறுத்து ஒரு நாள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் செலுத்தி பின் வெளியே வந்தார். தொடர்ந்து அதிகாரத்திற்கு எதிராக பல்வேறு மக்கள் இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசி வந்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. வலுக்கட்டாயமாகக் காஷ்மீர் இந்திய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில சுதந்திரத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அருந்ததி ராய் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த மாநாட்டில் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைனும் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு குறித்த விசாரணை டெல்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வருகிறது. இந்த நிலையில், இவர் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ்(UAPA) நடவடிக்கை எடுக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.
அருந்ததி ராய் தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்த நிலையில் 10 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கைத் தூசிதட்டிப் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.