நக்கீரன் அலுவலக முகவரிக்கு பெண் ஒருவரின் பெயரில், தலைநகரின் முக்கியப் பகுதியில் இருந்து ஒரு கொரியர் வந்தது. பிரித்து பார்த்த நமக்கு, அந்தக் கடிதம் இதயத் துடிப்பை அதிகரித்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு பெண் டிரைவும் இணைக்கப்பட்டிருந்தது. அதை சிஸ்டமில் போட்டுப் பார்த்தபோது, கடவுளாக மதிக்கும் மருத்துவர் ஒருவரின் செயல், நம்மை ஆட்டம்காண வைத்தது. அதுவும், மருத்துவமனைக்குள்ளே நடந்த அந்தச் சம்பவம் நம்மை நிலைகுலையச் செய்தது.
அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பின்வருமாறு, இந்த பெண்ட்ரைவில், டாக்டர் சுப்பையா ஷண்முகம் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் செவிலியர் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், பாலியல் செயலில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தச் செயலை அம்பலப்படுத்துவதன் நோக்கம் திரு.சுப்பையாவின் தொடர்ச்சியான பொருத்தமற்ற நடத்தையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதாகும். பின்வரும் காரணங்களுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என மூன்று காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
1. மருத்துவமனை அல்லது ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், வேலை நேரத்தில் பாலியல் செயல் நிகழ்ந்ததால் அது தண்டனைக்குரியது. அவர், ஏழை புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை நடக்கும்போது மேற்பார்வையிடவோ அல்லது அறுவை சிகிச்சைகள் செய்யவோ வேண்டிய நேரத்தில், இதுபோன்ற செயலில் ஈடுபட்டது அவமானகரமானது.
2. மாணவர்களுக்கு கற்பிக்கும் அரசாங்க ஆசிரியராகவும், தேசிய மாணவர் அமைப்பில் ஒரு முக்கிய நபராகவும் இருப்பதால், அவரது தவறான செயல்கள் மாணவர்களுக்கு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் அபாயமும் இருக்கின்றன.
3. அவர் தனது பெண் துணை ஊழியர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து, அதே பாலியல் சலுகைகளை எதிர்பார்க்கிறார். அவர் தனது அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்துகிறார். சம்மதிக்க மறுப்பவர்கள் மறைமுகமாக சிக்கலை எதிர்கொள்கிறார்கள். தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் முதல் உதவி பேராசிரியர்கள் வரை 16 முதல் 60 வயது வரையிலான அனைத்து பெண்களும் இவரால் பாலியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.
அவருக்கு அறநெறி குறித்து எந்தக் கவலையும் இல்லை. அவர் கண் வைத்துவிட்டால் எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பெண்கள் மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக, அவர் தண்டிக்கப்பட வேண்டும். தார்மீக அடிப்படையில் அவர் அரசு மற்றும் மாணவர் அமைப்பிலிருந்து, அனைத்து பதவிகளிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். ஊடகங்கள் தங்கள் கடமையை செய்யும் என நம்புவதாக" அந்தக் கடிதம் பல ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
புற்றுநோய் நிபுணரான மருத்துவர் சுப்பையா சண்முகம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறைத் தலைவராக பணியாற்றியவர். 2017 முதல் 2020 வரை ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் தேசியத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கும், அவர் வசிக்கும் குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் வசித்துவந்த மூதாட்டிக்கும் இடையே பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மருத்துவர் சுப்பையா சண்முகம், மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அவர் மீது பெண்களைத் துன்புறுத்துதல், கரோனா விதிமீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து.. திமுக அரசு பதிவியேற்ற பிறகு, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல, முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சென்று சந்தித்த மருத்துவர் சுப்பையா சண்முகம், கீழப்பாக்கம் புற்றுநோய் பிரிவு துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்தக் கடிதம் மற்றும் வீடியோ குறித்து மருத்துவர் சுப்பையா ஷண்முகத்திடம் நாம் தொடர்புகொண்டு பேசியபோது, "அது சித்தரிக்கப்பட்டது. அதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அனுப்பிய ஆள் யாரென்று விசாரித்து, முழு பின்னணியை விசாரித்து எழுதுவதுதான் பத்திரிகை தர்மம். நான் ஒழுங்கா வேலை பார்க்காட்டியும் திட்டுவேன். அதன்பொருட்டு என்னைப் பிடிக்காதவர்கள் எங்கேயாவது எதையாவது வீடியோ எடுத்து MORPH செய்து போட்டுவிடுகிறார்கள். முழு வீடியோ கிடைத்தால் சொல்லமுடியும் என்றார். அப்போது குறுக்கிட்ட நிரூபர், அந்த வீடியோ இரண்டு மணி நேரம் ஓடுகிறது. அதில் இருப்பது நீங்கள்தானே, அதேபோல சிறுநீர் கழித்த விவகாரத்திலும் உங்களது பெயர் அடிபட்டதே எனக் கேட்க, பதிலளித்த மருத்துவர் சுப்பையா ஷண்முகம், அதில் இருப்பது நான் கிடையாது. சிறுநீர் கழித்த விவகாரத்திலும் நான் சம்மந்தப்படவில்லை. நான் உங்களைப் பார்த்தது கிடையாது. வேண்டுமானால், நேரில் வாங்க பேசலாம்" என முடித்துக்கொண்டார்.