கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட பவானி கூடுதுறை மெயின்ரோடு பூபதி(40), ஈரோடு அசோகபுரம் ராமநாதன்(36), பூதப்பாடி ரமேஷ்(41), வெள்ளாங்கோவில் சுதாகர்(43), வெள்ளாபாளையம் கோபாலகிருஷ்ணன்(41) புளியம்பட்டி செந்தில்(43), கொண்டையம்பாளையம் சுமந்த்(33), கோபி கணக்கம்பாளையம், நடராஜ் மனைவி பொன்னுதாய்(59) உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக எந்தெந்த கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.