/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/15_108.jpg)
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ லிரிக் வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், வழக்கமான விஜய் பாடல்களின் கொண்டாட்டம் சற்றுகம்மி என்கின்றனர் சிலர்.
இந்த நிலையில் விஜய்யின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தி கோட்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்னசின்ன கண்கள்..’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலையும் விஜய் பாடியிருக்கும் நிலையில் அவருடன் இணைந்து மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுல் இடம்பெற்றுள்ளது. பவதாரிணி அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளது படக்குழு.
சகோதரியின் குரலைப் பயன்படுத்தியது குறித்து யுவன் சங்கர் ராஜா, “இந்தப் பாடல் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூரில் இந்தப் பாடலுக்கான இசைப்பணியிலிருந்த போது நானும் வெங்கட் பிரபும் எங்களது சகோதரி பவதாரிணியை பாட வைக்க நினைத்தோம். இந்தப் பாடல் அவளுக்கானது என்று உணர்ந்தோம். அந்தநேரத்தில் பவதாரிணியும் குணமாகத்தான் இருந்தாள். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் பவதாரிணி உயிரிழந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. அவளது குரலை நான் இப்படி பயன்படுத்துவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எனது இசைக்குழுவுக்கும், இந்தப் பாடல் உருவாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி. இது எனக்கு மிகவும் கசப்பான தருணம்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)