திமுக எம்.பி. கனிமொழிக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பைத் திடீரென விலக்கிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. இந்தச் சம்பவம் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
திமுக மகளிர் அணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழிக்கு தமிழக காவல்துறையின் பாதுகாப்பு இரண்டு ஷிஃப்டுகளாகக் கொடுக்கப்பட்டு வந்தன. அந்தப் பாதுகாப்பில் காவல்துறையைச் சேர்ந்த 11 பேர் இடம் பெற்றிருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு, இரண்டு ஷிஃப்டுகளாக இருந்த போலீஸ் பாதுகாப்பை ஒரு ஷிஃப்டாக மாற்றியது எடப்பாடி அரசு!
பொதுவாக, காவல்துறையின் பாதுகாப்பை விரும்பாதவர் கனிமொழி. இருப்பினும், தமிழக காவல் துறை கொடுத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை மரியாதைக்காக ஏற்றுக் கொண்டார். அதே சமயம், பொது நிகழ்வுகளுக்கும், தனது தொகுதியான தூத்துக்குடிக்கும் அவர் செல்லும் போது போலீஸ் பாதுகாப்பைத் தள்ளியே வைத்திருந்தார் கனிமொழி.
இப்படிப்பட்ட சூழலில், அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை கடந்த 23-ஆம் தேதி திடீரென ரத்து செய்துள்ளது எடப்பாடி அரசு. சி.ஐ.டி.காலணியிலுள்ள கனிமொழியின் வீட்டுக்கு 23-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு வந்த போலீஸார், ’கரோனா காலமாக இருப்பதால் போலீஸார் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்புத் திரும்பப் பெறப்படுகிறது‘ எனக் கனிமொழியிடம் சொல்லி விட்டு, பாதுகாப்பில் இருந்த போலீஸாரையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டனர்.
பாதுகாப்பு விலக்கப்பட்டிருப்பது குறித்து, ‘’போலீஸ் பாதுகாப்பிலும் அரசியல் செய்வது அதிமுக அரசுக்கு வழக்கமானதுதான். முதல்வர் எடப்பாடியும் அதனை நிரூபித்திருக்கிறார். போலீஸ் பாதுகாப்பு விலக்கப்படுகிறது என முன் கூட்டியே அறிவித்து விட்டுச் செய்திருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட தந்தை-மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனத் தமிழக காவல்துறை தலைவரைச் (டி.ஜி.பி.) சந்தித்து முறையிட்டார் கனிமொழி.
அந்தச் சந்திப்பில், ‘போலீஸாரின் சித்தரவதைகளால் தான் அவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனச் சந்தேகம் இருக்கிறது. முதல் கட்டமாக, அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையின் இதயம் கெட்டுவிட்டதோ?’ எனக் கோபமாகப் பேசி விட்டு வீட்டுக்குத் திரும்பினார். கொஞ்ச நேரத்திலேயே அவரது போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் போலீஸ் பாதுகாப்பில் அரசியல் செய்கிறது எடப்பாடி அரசு", என்று குற்றம்சாட்டுகிறார்கள் கனிமொழி தரப்பினர்.