தமிழ்நாடு சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (22-06-24) கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதே போல், முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ம.க தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏக்களான ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் செய்தியாளர்களைச் சந்தித்து எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பேசினர்.