கர்நாடகம் எனப் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில் கன்னடத்தாய் என்று கூறப்படும் நாததேவி புவனேஸ்வரி அம்மனுக்கு வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை, நேற்று (20-06-24) கர்நாடகா மாநிலம் விதான சவுதா மேற்கு நுழைவு வாயில் அருகே நடைபெற்றது. இந்த விழாவில், அம்மாநில முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டு சிலை நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்டி பேசினார்.
அதில் அவர், “கர்நாடக மாநிலத்தில், கன்னட சூழலை உருவாக்குவது அனைவரின் கடமை. அதற்கு கர்நாடகாவில் வாழும் மக்கள் அனைவரும் கன்னடம் கற்க வேண்டும். நாம் அப்படி அமைதியாக இருக்க முடியாது. கன்னடர்கள் அசிங்கமானவர்கள் இல்லை. கன்னடத்தின் மீது அனைவருக்கும் காதல் வளர வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள பெருந்தன்மைவாதிகள் போல் நாம் மாறக்கூடாது. நம் மொழி, நிலம், தேசம் ஆகியவற்றின் மீது மரியாதையையும், அபிமானத்தையும் வளர்க்க வேண்டும்.
கர்நாடகாவில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடத்தில் பேச அனைவரும் முடிவு செய்ய வேண்டும். கன்னடம் தவிர வேறு எந்த மொழியும் பேசுவதில்லை என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். கன்னடர்கள் பெருந்தன்மை உடையவர்கள். அதனால் பிற மொழி பேசுபவர்கள் கூட கன்னடம் கற்காமல் வாழக்கூடிய சூழல் கர்நாடகாவில் உள்ளது.
ஆனால், தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களில், உள்ளூர் மொழியைக் கற்காமல் அங்கே வாழ்வது எளிதல்ல. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் போன்ற மாநிலங்களில் அவர்களுடைய தாய்மொழியில்தான் பேசுவார்கள். அதனால், நாமும் நம் தாய்மொழியில் பேச வேண்டும். அது நம்மைப் பெருமைப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.