இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தொடர்பு இருப்பதாக அம்மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேஜஸ்வி யாதவின் நெருக்கமான அதிகாரியான அமித் ஆனந்த், நீட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான குற்றவாளியான சிக்கந்தர் பிரசாத் யாத்வெண்டுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். அந்த அதிகாரி, பாட்னா மற்றும் பிற இடங்களில் உள்ள விருந்தினர் மாளிகைகளில் சிக்கந்தர் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சிக்கந்தர் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரி அனுப்பிய செய்திகளின் விவரங்கள் என்னிடம் உள்ளன. இது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பிரசாத் ஏன் இது குறித்து மௌனம் சாதிக்கிறார்?” என்று கூறினார். இந்தப் பரபரப்பு குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.