பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதில், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கருத்துகள் தெரிவிக்க ஒரு நபர் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற கே.சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயார் செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேற்று (18-06-24) சமர்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘பள்ளி பாடத்திட்டத்தில் சமூக நீதி, சமுத்துவம், சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாத அளவுக்கு தலைப்புகளைச் சேர்க்க வேண்டும். இது தொடர்பான பொருத்தமான மாற்றங்களைப் பரிந்துரைக்க கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்ட சமூகநீதி கண்காணிப்புக் குழுவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நியமிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது.
தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும். கைகளில் வண்ணக் கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.