பா.ஜ.க எம்.எல்.ஏ உள்பட 16 பேர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், உஜ்ஜானி கோட்வாலி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வைத்திருந்த அவர்களது நிலத்தை, பில்சி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிஷ் ஷாக்யா குறைந்த விலையில் விலைக்கு கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அந்த பெண்ணின் குடும்பத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிஷ் ஷாக்யா தொடர்ந்து மிரட்டியும் துன்புறுத்தியும் வந்துள்ளார்.
இதையடுத்து, பெண்ணின் கணவரைக் கடத்தி சித்ரவதை செய்து அவர் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கை, எம்.எல்.ஏ ஹரிஷ் ஷாக்யா போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பெண்ணின் மைத்துனரைக் கடத்திச் சென்று, சரமாரியாக அடித்து நிலத்தை ஒப்படைக்குமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன முடைந்த பெண்ணின் மைத்துனர் ரோஹித் கடந்த 2022ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த பிரச்சனையை தீர்ப்பதாகக் கூறி பெண்ணை, தனது அலுவலகத்துக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிஷ் அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கு சென்ற அந்த பெண்ணை, ஹரிஷ் ஷாக்யா, அவரது சகோதரர் உள்பட 16 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். மேலும், நிலத்தை ஒப்படைக்கும் பத்திரத்தில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தியுள்ளனர் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிஷ் ஷாக்யா மற்றும் அவரது சகோதரர் சதேந்திர ஷாக்யா உள்பட 16 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு போன்ற வழக்குகளின் கீழ் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பெண் வைத்த குற்றச்சாட்டுகளை பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிஷ் ஷாக்யா மறுத்துள்ளார். குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் தனது புகழைக் கெடுக்க சதி செய்கின்றனர் என்றும் ஹரிஷ் ஷாக்யா தெரிவித்துள்ளார்.